Monday, May 21, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!


சைவ உலகில் இருந்த ஞானசம்பந்தர்களில், திருஞானசம்பந்தரை நன்கறிவோம். அடுத்து சந்தான குரவர்களில் ஒருவரான மறைஞான சம்பந்தரைப் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கப் போவது குருஞான சம்பந்தர் ஆவார். இவர் தருமை ஆதீன குரு முதல்வரும் கூட. இப்போது இவரைக் குறித்து அறிவோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்த காலம் அது. அங்கு கார்காத்த வெள்ளாளர் குலத்தில் சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும், மீனாக்ஷி அம்மையாருக்கும் ஒரு சோமவார நன்னாளில் அவர்களின் தவப் பயனாய் ஆண் மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் குழந்தை அந்த ஞானசம்பந்தனைப் போல் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணி ஞானசம்பந்தன் என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை சீரும் சிறப்புமாக வளர்ந்தது. இயல்பாகவே மொழியில் பற்று மிகுந்திருந்ததால் வடமொழியும், தமிழும் நன்கு கற்றுத் தேர்ந்தார் ஞானசம்பந்தர்.



 இவருக்குப் பதினாறு வயது ஆகும் சமயம் பெற்றோர்கள் இவரையும் அழைத்துக் கொண்டு மதுரை மீனாக்ஷியையும், சொக்கேசரையும் வழிபட வந்தனர். சில நாட்கள் மதுரையிலேயே தங்கி இருந்து ஆலயம் சென்று அம்மையையும், அப்பனையும் வழிபட்டு வந்தனர். பின்னர் பெற்றோர் ஊருக்குத் திரும்ப எண்ணினார்கள். மகனையும் உடன் அழைக்க, மகனோ மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல மறுத்துவிட்டார். மதுரையை மிகவும் பிடித்து விட்டதாயும், ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணி அம்மையையும் விட்டுப் பிரிய மனம் இல்லை எனவும் கூறிவிட்டுத் தந்தையோடும், தாயோடும் சொந்த ஊர் செல்ல மறுத்தார். திரும்பத் திரும்பப் பிடிவாதமாய் இவர் இப்படிச் சொல்லவும் பெற்றோர் சில காலம் விட்டுப் பிடிக்கலாம் என எண்ணிப் பையனை அங்கேயே விட்டு விட்டுச் சொந்த ஊர் திரும்பினார்கள்.



ஞானசம்பந்தர் தன் இருப்பைப் பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றிக் கொண்டார். தினந்தோறும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கேசரையும், மீனாக்ஷி அம்மையையும் வழிபட்டுவிட்டு. பொற்றாமரைக் குளக்கரையில் மற்றச் சிவனடியார்கள் செய்யும் வழிபாடுகளைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து பரவசநிலையில் ஆழ்ந்திருக்க எண்ணினார். அதற்கு முதலில் சிவ வழிபாடு செய்ய வேண்டுமே. என் செய்வது? தம் விருப்பத்தைச் சொக்கேசனிடம் விண்ணப்பித்துக் கொண்டார். சில நாட்கள் சென்றன. தினம் தினம் சொக்கேசனிடம் சிவ வழிபாடு செய்ய ஒரு வழிகாட்டுமாறு விண்ணப்பிப்பதே அவரின் லட்சியமாயிற்று. ஒரு நாள் இரவு தூங்குகையில் கனவில் சொக்கேசன் தோன்றி, “ஞானசம்பந்தா, பொற்றாமரைக் குளத்தின் ஈசான்ய மூலையில் நீருக்கடியிலே ஒரு பெட்டகத்துள்ளே இலிங்க வடிவில் நாம் குடி இருக்கிறோம். நீ அதனை எடுத்து உனக்கேற்ற வழியில் வழிபடுவாயாக!” என்றார். உடனே கண் விழித்த ஞானசம்பந்தர் விடியும் வரை காத்திருந்து, விடியற்காலையில் பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று ஈசான்ய மூலையில் இறங்கி நீருக்குள்ளாக மூழ்கிப் பெட்டகத்தைத் தேடினார். சிறிது நேரத் தேடலிலேயே பெட்டகம் அவர் கைகளில் கிடைக்க, சொக்கேசன் சந்நிதிக்கு ஓடோடிச் சென்ற ஞான சம்பந்தர், மகிழ்வோடு அவரை வணங்கித் துதித்து, பெட்டகத்தினுள் இருந்த இலிங்க வடிவை, சொக்கலிங்கம் என்ற பெயரோடு தினந்தோறும் வழிபட்டு வரலானார்.

" கண்ணுக்கினிய பொருளாகி யேஎன் கரத்தில் வந்தாய்
 விண்ணும் பரவிடும் அற்புத மே என்ன விஞ்சையிதான்
 மண்ணும் புகழ்ந்திட என்னையும் பூரண வாரியுள்ளே
 நண்ணும்படி செய் மதுரா புரிச் சொக்க நாயகனே!’

 என்ற பாடல் குருஞானசம்பந்தரால் பாடப் பட்ட சொக்கநாதக் கலித்துறையின் பதினோரு பாடல்களில் முதற்பாடலாகும்.


 இந்த இலிங்க வடிவே இன்னுமும் தருமை ஆதீனத்தில் ஆன்ம பூஜா மூர்த்தியாய் எல்லா குருமகா சந்நிதானங்களாலும் வழிபடப் பெற்று வருகிறார். நம் ஞானசம்பந்தருக்கோ மூர்த்தி கிடைத்துவிட்டது எனச் சும்மா இருக்க இயலவில்லை. தமக்கு ஞானமும் கிட்ட வேண்டும் என எண்ணினார். ஞானம் பெறுவது என்பது ஒன்றும் சுலபமான ஒன்றில்லை. தக்க குருவின் மூலம் உபதேசங்கள் பெற வேண்டும். அதற்கான குரு யார்? எவர்? எங்கிருக்கிறார்? அனைத்திற்கும் வழிகாட்டிய சொக்கேசனே இதற்கும் வழிகாட்ட வேண்டும். மீண்டும் சொக்கனின் இறைஞ்சினார் ஞானசம்பந்தர். சொக்கேசனும் மனம் இரங்கி இவரது கனவில் தோன்றி. “ திருவாரூரில் ஞானப் பிரகாசன் என்றொரு பக்தன் இருக்கிறான். அவனுக்கு நாம் உபதேசித்தருளிய ஞானம் பரம்பரையாக வந்தது. நீ திருவாரூர் செல். ஞானப் பிரகாசனிடம் உபதேசம் பெறுவாய்! ஞான மார்க்கத்தை உனக்கு அவன் காட்டுவான்! “ என்று கூறினார். இவ்வாறு கனவு கண்ட ஞானசம்பந்தர் ஈசனின் அருள் தனக்குக் கிட்டியதை உணர்ந்து மகிழ்ந்து அங்கே சொக்கேசனிடம் விடை பெற்றுக் கொண்டு தியாகேசனைத் தரிசிக்கவும், ஞானோபதேசம் பெறவும் வேண்டி திருவாரூருக்குப் புறப்பட்டார். குரு ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற கவலையும் ஒரு பக்கம்.

No comments:

Post a Comment