Monday, February 13, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள்!

பிள்ளையவர்களின் வரலாற்றை அவருடைய முதன்மை மாணாக்கரான ஐயரவர்கள் 1933-34 ஆம் ஆண்டுகளில் இரு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐயரை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பிள்ளையவர்களுக்கு சங்கீதத்தில் ஈடுபாடு கிடையாது. ஆனால் அந்நாட்களில் தமிழ் கற்போர் பலரும் தமிழ்ப் பாடல்களைப் பண்களில் அமைத்துப் பாடும் வண்ணமே கற்று வந்தார்கள். அதற்காகவென்றும், சங்கீத பரம்பரையான குடும்பத்தில் பிறந்ததாலும் ஐயரவர்களும் சங்கீதம் கற்று வந்தார். அந்நாட்களில் பிரபலமான கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சங்கீதம் கற்று வந்தார். ஆனால் இதைப் பிள்ளையவர்களின் சம்மதம் பெறாமலேயே செய்ய வேண்டி வந்தது. மேலும் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரத்தை இசைப்பாடலாக இயற்றியதில் இலக்கணத் தவறுகளும், சொற்குற்றமும், பொருட்குற்றமும் நிரம்பி இருந்ததாகவும் பிள்ளையவர்களின் கருத்தாக இருந்தது. அதற்காகவே கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்திற்குச் சிறப்புப் பாயிரம் எழுதிக் கொடுக்க மிகுந்த தாமதம் செய்துவிட்டுப் பின்னர் பாரதியார் வாயிலாகவே பாடல்களைக் கேட்டு மனம் உருகி எழுதிக் கொடுத்தார். ஆனால் அதற்காகவெனத் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.

திருவாசகத்தில் தில்லையைக் குறித்த பாடல்களே பெரும்பாலும் காணப்படுவதைப் போல, பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் என்னும் பிள்ளையின் பாடல்களே காணப்படுவதைப் போல, பிள்ளையவர்களின் வாழ்நாளில் பாதி திருவாவடுதுறை ஆதீனத்திலேயே கழிந்தது. இவர் அங்கிருக்கையிலேயே பல தல புராணங்களையும் பாடி இருக்கிறார். காசி ரகசியம், சூத சங்கிதை ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு அல்லாமால் குசேலோபாக்கியானமும் எழுதினார். ஆனால் குசேலோபாக்கியானம் மட்டும் இவரது மாணாக்கரான வல்லூர் தேவராசப் பிள்ளை என்பவர் பெயரால் வந்துள்ளதாய்க் கூறப்படுகிறது. எழுபது புராணங்கள், பதினொரு அந்தாதிகள், பத்துப் பிள்ளைத்தமிழ்கள், இரண்டு கலம்பகங்கள், மூன்று கோவைகள், ஏழு மாலைகள், உலா, லீலை ஆகியவற்றில் ஒவ்வொன்றும் எழுதி இருப்பதாய்க் கூறுவார்கள். அந்தாதிகளில் பதிற்றுப்பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி ஆகியன அடங்கும். இவரது சீடரான ஐயரவர்கள் இவற்றை எல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்து திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் வெளியிட்டிருக்கிறார்.

சங்கத் தமிழ் தந்த சாமிநாதையரைத் தமிழுலகுக்குத் தந்தவரே பிள்ளையவர்கள் எனலாம். தம் மாணாக்கரிடம் ஆசிரியரும், ஆசிரியரிடம் மாணாக்கரும் கொண்டிருந்த பற்றும் பாசமும் வியக்கத்தக்கது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பிள்ளையவர்களின் கடைசிக்காலம் வரையிலும் அவரிடம் பாடம் கேட்டவர் சாமிநாதையர். பிள்ளையவர்களின் சமகாலத்தவரான ஆறுமுக நாவலரிடமும் பிள்ளையவர்கள் மிக்க மரியாதை கொண்டிருந்தார். இருவரும் உரையாடுவதைக் கேட்கவென்றே சீடர்கள் ஆவலோடு காத்திருப்பார்களாம். ஆறுமுக நாவலரும் பிள்ளையவர்களும் கொண்டிருந்த நட்பைக் குறித்த செவிவழிச் செய்தி ஒன்று கூறுவதாவது: மார்கழிக் குளிரில் ஒருமுறை மதுரை வையை நதியில் இருவரும் சீடர்கள் சூழக் குளிக்கையில் குளிர் தாங்காமல் நாவலர், “பனிக்காலம் கொடியது.” எனச் சொல்ல அதைக் கேட்ட பிள்ளையவர்கள்,” பனிக்காலம் மிக நல்லது.” என பதிலிறுத்தாராம். நாவலர் அவர்கள் கருத்தைப் புரிந்து கொண்டு நகைக்கச் சுற்றிலும் இருந்தவர் விளங்காமல் திகைக்கப் பின்னர் விளக்கினார்களாம். பனிக்கு, அதாவது குளிருக்கு ஆலம்(விஷம்) மிக நல்லது எனப் பிள்ளையவர்கள் கூறியதாகத் தெரிவித்தாராம் நாவலர். இது குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.

இவ்வாறு பணிவும், பொறுமையும் நிரம்பப் பெற்று எப்போது வேண்டுமானாலும் பாடல்களைப் புனையும் திறமையையும் பெற்று பிறரிடம் குற்றம் காணாமல், அனைவருக்கும் உதவிகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்த பிள்ளையவர்கள், 1876-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் தம் மாணவரில் ஒருவரான சவேரிநாதப் பிள்ளையின் மடியில் சாய்ந்து உயிரை விட்டார். இவரது முழுமையான வரலாற்றை உ.வே.சாமிநாதையர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment