Wednesday, November 30, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மெய்கண்டார் 1

சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள். சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள். ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள். சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன. சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும். அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர், அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், கடைசியாக உமாபதி சிவம். இவர்களில் உமாபதி சிவாசாரியார் பற்றி நாம் இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம். இப்போது மெய்கண்டார் பற்றிப் பார்க்கலாம், காலம் கி.பி. 1223

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர். சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும். இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார். அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை. ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார். கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்” என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.” என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார். ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை; ஆனால் நீ எம் சீர்காழிப்பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்.” என்று அருளுகிறார். அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது. குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று. குழந்தைக்கு மூன்று வயதிருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

Sunday, November 27, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! தாயுமானவர் 2


குருவால் ஆட்கொள்ளப்பட்ட தாயுமானவர் ஆன்ம சாதனங்களில் வெகு விரைவில் முன்னேற்றம் அடைந்தார். ஆச்சாரியருக்கு பக்திபூர்வமாகப் பணிவிடைகள் புரிந்தார். குருவிடம் மாறாத பக்தியும், பாசமும் வைத்திருந்த தாயுமானவருக்குச் சில காலம் குருவைப் பிரிய நேரிட்டது. பிரிந்திருக்கும் காலத்தில் மனம்குழம்பித் தவித்தார் தாயுமானவர். குருவோ இதற்கெனக்கவலைப்பட வேண்டாம் எனவும், சீடன் தனது கர்மாக்களின் பெரும்பகுதியைப் பூர்த்தி பண்ண வேண்டியே இப்பிரிவு எனவும், அதன் பின்னர் அமையப்போகும் குரு-சீடன் உறவு மிக மிகச் சிறப்பாக அமையும் எனவும் உறுதிமொழி கூறியதோடு அல்லாமல் சீடனுக்குப் பிரியும் வேளையி, "சும்மா இரு" எனும் மந்திர உபதேசம் செய்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து அதையே பீஜ மந்திரமாய்க் கொண்ட தாயுமானவ சுவாமிகள் தன் அனைத்துப் பாடல்களிலும் இந்த உபதேச மொழியை முக்கியக் கருத்தாக அமைத்திருப்பது தாயுமானவரின் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுவோர்க்கு நன்கு விளங்கும்.


இவ்வுலகத்தின் பந்த பாசங்களில் அகப்பாடமல் இருக்க வேண்டி எந்நாளும் இறைவனைப் பிரார்த்தித்துப் பற்றற்ற வாழ்க்கை வாழ விரும்பிய தாயுமானவரை அவரின் பெற்றோர்கள் திருமணக் கோலத்தில் காண விரும்பினார்கள். தாய், தந்தையரின் விருப்பத்தைத் தட்ட முடியாத தாயுமானவர் மட்டுவார் குழலில் என்னும் பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இல்லறம் மேற்கொண்ட பிறகு அதற்குரிய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதே தர்மம் எனப் புரிந்த தாயுமானவர் மனைவியோடு அறவழியில் இல்லறத்தை நடத்தி கனகசபாபதி என்னும் பெயருடைய ஆண் மகவு ஒன்றையும் பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்த சில காலத்திலேயே தாயுமானவரின் மனைவி மட்டுவார் குழலி அம்மை காலமானார். தாயுமானவர் வேறொரு திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரின் மகனை வளர்க்கும் பொறுப்பைத் தாயுமானவரின் தமையனார் சிவசிதம்பரமும், அவரின் மனைவியும் ஏற்றுக் கொண்டனர். அத்தோடு ஆத்மசாதனைக்குத் தடை என நினைத்த தாயுமானவரின் இல்லற வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது.



இதனிடையே தாயுமானவரின் தந்தையார் கேடிலியப்ப பிள்ளையும் மரணமடையவே திருச்சி அரசு மீகாமன் இல்லாத கப்பல் போலத் திண்டாடியது. அரசர் தாயுமானவரே இந்த மாபெரும் பொறுப்பை ஏற்க வல்லவர் என்றுணர்ந்து அவரை அழைத்துத் தகப்பனாரின் பதவியில் தாயுமானவர் அமர்ந்து அரசருக்கும், அரசாட்சிக்கும் உதவும்படி கேட்டுக்கொண்டார். தந்தை மூலம் இந்த விஷயங்களில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்த தாயுமானவர் அரசரின் சொல்லைத் தட்ட முடியாமல் பொறுப்பை ஏற்றார். வெகு விரைவில் இதில் திறமை பெற்றவராகித் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்ற ஆரம்பித்தார். நாளடைவில் மன்னனும் மடிய அவன் மனைவியான ராணி மீனாக்ஷி பட்டத்தை ஏற்றாள். ராணி மீனாக்ஷிக்குத் தாயுமானவரின் இளமையும், தேஜஸும் கண்டு மனம் பேதலித்தது. ஆனாலும் வெளிப்படையாகச் சொல்லாமல் தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள். ஒருநாள் அரசாங்க வேலைகளைப் பனை ஓலைகளில் குறிப்பெடுத்து வைத்துச் சரிபார்த்துக்கொண்டிருந்த தாயுமானவர் திடீரென முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர் அதைக் கசக்கித் தூர எறிந்தார். இதைக் கவனித்த ராணி மீனாக்ஷி காரணம் கேட்க, அப்போதே தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர் , திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், அதைத் தாம் அணைத்ததாகவும் கூறினார். இதை நம்பாத ராணி மீனாக்ஷி கோயிலுக்குச் சென்று உண்மையை அறிந்துவரச் செய்தாள்.

உண்மையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது குறித்துத் தெரிந்ததும் ராணிக்கு இவர் எவ்வளவு பெரிய மஹான் என்பது புரிந்தது. தாயுமானவருக்கும் அரசல் புரசலாக ராணியின் தகாத ஆசை தெரிந்திருந்ததால் தான் பதவியை விட்டு விலகுவதே சரி என்றும், தீர்மானித்து விட்டார். உடனே அரசியிடம் தன் மனம் இவ்வுலக வாழ்வை நாடவில்லை என்றும், தன் போக்கில் செல்லத் தன்னை அனுமதிக்குமாறும் கூறி அரசுப் பதவியை விட்டு விலகிவிட்டார். வெளியேறி வந்த தாயுமானவருக்கு மீண்டும் தம் குருவின் தரிசனமும் கிட்டி அவர் மூலம் சந்நியாச ஆசிரமமும், உபதேசமும் கிடைக்கப் பெற்றது. அன்று முதல் கோவணாண்டியாகவே இருந்து கொண்டு அதே திருச்சியில் வசித்து வந்தார். அவர் இருந்த உத்தியோகத்தின் மேன்மையையும் செல்வாக்கையும், செல்வநிலைமையையும், இப்போது இருக்கும் நிலையையும் பார்த்த அன்பர் ஒருவர் அவருக்குக் குளிர்காலத்திற்குப் போர்த்திக்கொள்ளவென ஒரு அழகான காஷ்மீரப் பட்டுச் சால்வையைப் பரிசளிக்க அவரோ அதை உடுத்த உடை இல்லாதிருந்த ஒரு பிச்சைக்காரிக்குக் கொடுத்துவிட்டார். தாம் கொடுத்த சால்வை எங்கே எனக் கேட்ட அன்பரிடம், அகிலாண்டேஸ்வரிக்கே கொடுத்துவிட்டதாய்ப் பதிலளித்தார். இப்படிப் பார்க்கும் பெண்களிடத்தில் எல்லாம் இறையைப் பார்த்த தாயுமானவர், யாத்திரையாகக் கிளம்பி ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் காலையில் ராமநாதபுரத்திற்கு வெளியே லக்ஷ்மிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார். இவரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகும்.

Friday, November 25, 2011

மெரினாவுக்கு ஈடு, இணை உண்டா?

கடற்கரையில் லைட் ஹவுஸ்


பசுமையோடு காட்சி அளிக்கும் கடற்கரையின் ஒரு தோற்றம்.



ஹூஸ்டன் நகரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கடற்கரைப் பிரதேசம் ஒரு சுற்றுலாத்தலமாக அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பல கடற்கரை விளையாட்டுகள், காட்சிகள், பல்வேறு விதமான பொருட்களை விற்கும் கடைகள், கடல் நீரைப் பார்த்த வண்ணம் அமர்ந்து உணவு உண்ணும்படியான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என உள்ளன. குழந்தைகள் விளையாடப் பலவிதமான விளையாட்டுகளும் காணப்படுகின்றன. குட்டி ரயிலில் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றி வரலாம். ரோலர் கோஸ்டரில் ஏறிச் செல்லலாம். இன்வெர்டர் என அழைக்கப்படும் லிஃப்ட் போன்ற தூக்கும் வசதி கொண்ட ஒரு பெட்டியில் அமர்ந்து பெல்டினால் நம்மை இறுகக் கட்டிக்கொண்டால் அது நம்மை மேலும் கீழும் தூக்கி விளையாட்டுக் காட்டிவிட்டுப் பின்னர் தலைகீழாகவும் நம்மைத் தூக்கும். அதன் பின்னர் கிட்டத்தட்ட 150 அடி உயரத்தில் காணப்படும் கம்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கே சற்று நேரம் வைத்திருந்துவிட்டுப் பின்னர் அதிவேகமாய்க் கீழே இறங்கும்.
சிலருக்கு இதைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஆகவே மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே விளையாடலாம். இதை போர்ட் வாக் டவர் ட்ராப் ஜோன் எனக் கூறுகின்றனர்.


இதைத் தவிரவும் குழந்தைகள் ஆடுகுதிரையில் விளையாடலாம். இந்தக் குதிரை விளையாட்டு இரு தளங்களாக அமைக்கப்படுகிறது. மேல் தளத்தின் குதிரைகள் அருகிலும், கீழ்த்தளத்தின் குதிரைகள் அருகேயும் ஒவ்வொரு காப்பாளர் அருகே நின்று கொண்டே குதிரைகள் இயக்கப்படுகின்றன. இந்த விளையாட்டு வைப் அவுட் என அழைக்கப்படுகிறது. இதைத் தவிரக் குடைராட்டினமும் உள்ளது. உயரம் மிக அதிகமாகவும் உள்ளது. 65 அடி உயரத்தில் சுற்றுவதாய்க்கூறுகின்றனர். இதை விடவும் உயரத்தில் ஏவியேட்டர் என்னும் சக்கரச் சுற்றும், பலூன் வீல் எனப்படும் கூண்டு அமைக்கப்பட்ட குடைராட்டினமும் குழந்தைகள் கண்ணையும், கருத்தையும் கவரும்.
இன்னமும் பாட்டில்களைக்குறி தவறாமல் அடித்துப் பரிசாக பொம்மைகள் மற்றும் பல பொருட்களைத் தரும் கடைகள், ஐஸ்க்ரீம் ஸ்டால்கள், காஃபிக் கடைகள், துணிக்கடைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், செயற்கை மணிமாலைகள், முத்துமாலைகள் விற்கும் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகளும் காணப்படுகின்றன. என்றாலும் சுற்றுவட்டாரம் சுத்தமாய்ப் பராமரிக்கப்படுகிறது. கடைகளின் பக்கவாட்டுத் தோற்றம்.


வேகமாய்ச் செல்லும் படகுகளிலும் அரைமணிநேரப் பிரயாணம் செய்யலாம். நாற்பது மைல் வேகத்தில் செல்லும் படகுகளின் பயணம் உற்சாகம் கொடுக்கும்.

எல்லாவற்றுக்கும் மேல் கடற்கரை சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. அத்தனை மக்கள், குழந்தைகளோடு வந்து விளையாட்டுகள் விளையாடி, உணவு உண்டு, என அத்தனையும் செய்த போதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளிலேயே குழந்தைகளைக் கூடக் குப்பைகளைப் போடும்படி பழக்கி இருக்கின்றனர். உணவுப் பொருட்களின் மிச்சமோ, துணிகளோ, ப்ளாஸ்டிக் கவர்களோ, பேப்பர் குப்பைகளோ காண முடியாது. அதோடு எங்கே சென்றாலும் வசதியான கழிப்பறைகளும், அவைகளின் சுத்தமான பராமரிப்பும், மக்கள் அவற்றைச் சுத்தமும், சுகாதாரமும் நீடித்து இருக்குமாறு பயன்படுத்துவதும், சிறு குழந்தைகளுக்குப் பொதுக்குழாயில் கைகளைக் கழுவ வேண்டி சின்னதாய் வடிவமைத்து ஆங்காங்கே காணப்படும் ஸ்டூல்களும், சின்னஞ்சிறு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துக்குழந்தைகளுக்கும், டயப்பர் மாற்றத் தனி இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு முன்னுரிமை.

Thursday, November 17, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! தாயுமானவர்

தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கேடிலியப்ப பிள்ளை என்னும் சைவ வேளாளர் வாழ்ந்து வந்தார். வேளாண்மை குலத்தொழில் என்றாலும் எல்லையற்ற சிவபக்தியால் அவ்வூரின் சிவஸ்தலத்தின் நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஆலயம் புதிய ஒழுங்குக்கு வந்தது. அப்போது நாயக்கர் ஆட்சிக் காலம். திருச்சியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் கடல் நீராடி வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க எண்ணி அங்கே வருகை புரிந்தார். கேடிலியப்ப பிள்ளை மன்னரை முறைப்படி வரவேற்று மரியாதைகள் எல்லாம் செய்து தரிசனமும் செய்து வைத்தார். கோவில் வழிபாட்டில் இருந்த நியமங்களையும், கோயிலின் சுத்தத்தையும், ஒழுங்கான முறையான நிர்வாகத்தையும் கவனித்த அரசர் நிர்வாகியான கேடிலியப்ப பிள்ளையின் கல்வித்தேர்ச்சியையும் கவனித்துக்கொண்டார். இத்தனை திறமை வாய்ந்த அவர் இருக்குமிடம் இதுவல்ல என முடிவு செய்த அரசர் அவரைத் திருச்சி அழைத்தார்.
கேடிலியப்ப பிள்ளையைத் திருச்சிக்கு வந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள ஆணையிட்டார். கோயிலின் நிர்வாகத்தைத் தக்க நபரிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். கேடிலியப்ப பிள்ளைக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. கோயிலைத் தக்க மனிதர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்குச் செல்லத் தீர்மானித்தார். கேடிலியப்ப பிள்ளைக்கும் அவர் மனைவியான கெஜவல்லி அம்மைக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான். ஆனால் கேடிலியப்ப பிள்ளையவர்களின் அண்ணாவான வேதாரண்யம் பிள்ளைக்கு மகப்பேறு வாய்க்காததால் சிவசிதம்பரம் என்னும் பெயர் கொண்ட தம் மகனைத் தம் அண்ணனுக்கே முழு மனதோடு சுவீகாரம் செய்து கொடுத்திருந்தார் கேடிலியப்ப பிள்ளை. பின்னரே திருச்சிக்கு மனைவியோடு வந்தார்.


அங்கே மலைக்கோட்டையில் வீற்றிருந்த தாயுமானவரைத் தினம் தினம் தரிசனம் செய்து வந்தார். அவர் மனைவியும் அவருடன் செல்வார். ஈசன் தாயுமானவராகச் செட்டிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துத் தாயும் ஆன கதையை நினைந்து நினைந்து மனம் நெகிழ்வார். ஏற்கெனவே பிறந்த பிள்ளையை அண்ணனுக்குக்கொடுத்துவிட்டதால் தனக்கு இன்னொரு மகன் பிறக்க வேண்டும் என ஈசனிடம் முழு மனதோடு வேண்டினார். சிறிது காலத்தில் அவர்களுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். தாயுமானவர் அருளால் பிறந்த அந்தப்பிள்ளைக்குத் தாயுமானவர் என்ற பெயரையே பெற்றோர் சூட்டினார்கள். குழந்தை பிறந்த உடனேயே அதன் அங்க அடையாளங்களில் நிறைநிலைகள் பல தென்பட்டன. அதோடு குழந்தை ஒரு ஞானியாக, யோகியாக பர நாட்டத்தில் மேன்மை அடைவான் என ஜோதிடரும் கணித்துச் சொல்லவே பெற்றோர் மனம் மகிழ்ந்தனர். குழந்தைக்கு வயது ஐந்து ஆயிற்று. பெற்றோர்கள் குழந்தைக்கு வித்யாரம்பம் பண்ணி வைத்தார்கள்.


திருச்சியில் சிறப்பான பாடசாலை ஒன்றில் கல்வி கற்றார் தாயுமானவர். தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் தாயுமானவர் நிபுணராக விளங்கினார். சைவத்தில் அதிகம் ஈடுபாடுடன் தேவாரம், திருவாசகம், சைவ ஆகமங்கள், அருணகிரியாருடைய திருப்புகழ் போன்றவற்றையும் நன்கு கற்று வந்தார். தினம் மலைக்கோட்டையில் மலை ஏறித் தாயுமானவன் ஆன சிவனைத் தரிசனம் செய்துவிட்டுப் பின்னர் திருவானைக்கா சென்று அகிலாண்ட நாயகியை வழிபடுவதைத் தன் நித்திய கர்மமாக வைத்திருந்தார் தாயுமானவர். ஒருநாள் மலைக்கோட்டை தரிசனம் முடிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தவரை வழியில் ஒரு முனிவர் கண்டார். அவரைப் பாரத்ததுமே உடலும், உள்ளமும் அவர் பால் ஈர்த்தது தாயுமானவருக்கு. அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார். அதிகம் பேசாமல் மெளனமாக இருந்ததால் மெளன குரு என அழைக்கப்பட்டு வந்தார் அந்த முனிவர். அவருடைய வாயினின்று எப்போதேனும் அபூர்வமாகவே சொற்கள் வெளிவரும். மேலும் அவர் திருமூலர் மரபில் வந்தவராகவும் கூறுகின்றனர். அதை ஒட்டியே தாயுமானவர் தம் பாடல்களில் "மூலன் மரபில் வரு மெளனகுருவே" என்று போற்றி இருப்பதாகவும் தெரிய வருகிறது. தாயுமானவர் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆட்பட்டார்.