Sunday, July 31, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

பிரம்ம சமாஜிகளுக்குத் தங்கள் குருவான ஸ்ரீதர நாயக்கர் விக்ரஹ ஆராதனை கூடாது என்பதை நிரூபித்து பிரம்ம சமாஜக் கொள்கையை நிலைநாட்டவேண்டும் என்ற ஆவல் மூண்டெழுந்தது. ஆகவே அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலால் ஸ்ரீதரநாயக்கர் எல்லோரையும் பார்த்து, “அந்த முக்காட்டுச் சாமியாரைச் சரியான மறுப்போடு என்னுடன் விவாதிக்கச் சொல்லுங்கள். “ என்று அடிகளிடம் கொண்ட கோபத்தோடும், வெறுப்போடும் கூறினார். அடிகளோ தன் சாந்தமான நிலையில் இருந்து முற்றும் மாறாமல், பிரம்ம சமாஜத்தின் கோட்பாடை விளக்கச் சொல்லி வேண்டினார். உடனே தன் வாதத்தைத் தொடங்கிய ஸ்ரீதர நாயக்கர், நித்திய, நிரஞ்ச, நிர்மல, நிராமய, நிராலம்ப சொரூபமானதும், அவாங் மநோகோசரமும் ஆன பிரம்மத்தை நினைத்தாலே போதுமானது. விக்ரஹ ஆராதனை என்பது சிறிதும் உதவாத ஒன்று. இதுவே பிரம்ம சமாஜத்தின் கோட்பாடு.” என்று கூறினார்.



அடிகள் உடனே,” மநோகோசரமான மனதிற்கு பிரம்மம் எட்டுமா?? அப்படி எட்டாத பிரம்மத்தை எவ்வாறு நினைப்பீர்கள்? இது ஆகாயத்தை அடியாலும், படியாலும் அளக்கலாம், காற்றையும் கையால் பிடிக்கலாம் என்பது போல் அன்றோ உள்ளது. கொஞ்சமும் பொருந்தாத ஒன்று.” என்றார். ஸ்ரீதர நாயக்கரோ, “நம் ஞானம் ஓர் எல்லையிலே நிற்கிறது என்பதால் பிரம்மம் மனதுக்கு எட்டாது என்று கூற முடியுமா? இது சரியில்லை.” என்றார்.



“அடிகளே, மெய்வாதம் புரியவேண்டும். தாங்கள் பொய்வாதம் புரிகிறீர்கள்.” என்றார் ராமலிங்க அடிகள் நாயக்கரிடம். மேலும், “பிரம்மம் மனதுக்கு மட்டுமல்ல, புத்தி, சித்தம், அஹங்காரம் போன்ற அந்தக்கரணங்களுக்கும், கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒருக்காலும் விஷயமாக ஆகாது. பிரம்மத்தின் நாமரூபமே விஷயமாகும். அதோடு மனம் லயமடைய வேண்டாமா? மனம் லயமடைந்தாலே பிரம்மாநுபவம் ஏற்படும். அதை உணரவும் முடியும். அங்கே மனதின் முனைப்பு ஒரு கடுகளவு தென்பட்டாலும் ஆத்மஞானம் புரியாது, பிடிபடாது. சுருதி, யுக்தி, அநுபவம் ஆகிய மூன்றும் இதை நிரூபித்துக் காட்டும்.” என்றார். அங்கிருந்த வள்ளலாரின் அடியார்கள் மகிழ்வு பொங்க ஆரவாரம் செய்தார்கள். ஸ்ரீதர நாயக்கரைப் பார்த்து அடிகளார் அற்புத விளக்கம் கொடுத்திருப்பதாயும் இதை எதிர்த்தோ அல்லது மறுத்தோ உங்களால் கூற முடியுமா எனவும் வினவினார்கள். ஸ்ரீதர நாயக்கருக்கு உள்ளூரக் கொஞ்சம் பயம் தான். ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், “பிரம்மத்தை மனதால் தியானிக்கலாம் என்பதை நான் அறிவேன். வேறொன்றும் அறிய மாட்டேன். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.” என்று கூறி விவாதத்தை முடிக்க நினைத்தார்.



ஆனால் அடிகளோ, “பொதுவாய்ச் சொன்னால் எப்படி? பிரம்மம் மாயாதீதமானது. மாயா காரியம் ஆன மனதிற்கு அது புலப்படாது. ஆகவே இதைத் தாங்கள் தெளிவுபட விளக்கவேண்டும்.” என்றார்.



ஸ்ரீதரநாயக்கருக்கு வேறு வழி தென்படவில்லை. ஆகவே அவர் அடிகளிடம், “நான் விளக்குவதை விடுங்கள். இப்போது நீங்களே விளக்குங்கள். அந்தக்கரணங்களாலும், பஞ்ச இந்திரியங்களாலும் அறிய முடியாதென்று நீங்கள் சொல்லும் பிரம்மத்தை அறிவது பின் எவ்வாறு? அதைச் சொல்லுங்கள் முதலிலே!” என்று எகத்தாளமாய்க் கூறினார். இதற்கு அடிகளால் பதில் கூற இயலாது என்றே நாயக்கர் நினைத்தார். ஆனால் அடிகளோ, “ ஆன்மஞானத்தால் பிரம்மத்தை உணரலாம். அதைத் தாங்கள் அறியவேண்டும்.” என்று கூறினார். நாயக்கரால் பதில் பேச முடியவில்லை. அப்போது அடிகளாரின் நண்பர்கள் மேலும் ஸ்ரீதர நாயக்கரைப் பார்த்து, “இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா? அல்லது இன்னும் மறுக்கிறீர்களா?” என்று கேட்க ஸ்ரீதர நாயக்கர் எழுந்து கிளம்ப ஆரம்பித்தார். கிளம்பும்போது, இந்த விஷயத்திற்குப் பதிலைத் தாம் கடிதம் மூலம் அடிகளுக்கு அனுப்புவதாயும் கூறினார். அனைவரும் கேலியாகச் சிரித்தனர். அடிகள் அதைத் தவறு என்று கண்டித்தார். ஸ்ரீதர நாயக்கருக்கோ அவமானத்தால் உடம்பும், உள்ளமும் கூசிற்று. சினமும் ஏற்பட்டது. உடனேயே அனைவரையும் பார்த்து, “எண்ணி எட்டே நாள்! உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தி நான் சிரிக்கிறேன்.” என்று சவால் விட்டார். அவர் நிலை பரிதாபமாய்த் தோன்றிற்று அனைவருக்கும். அதே சமயம் கண்டிக்கவும் நினைத்தனர். ஆனால் அடிகளோ அவர் மேல் இரக்கம் கொண்டு, “ஸ்ரீதர நாயக்க அடிகளே, இது என்ன கர்வம் கொண்டு பேசுகிறீர்?? இவ்வாறு பேசாதீர்கள். இது உமக்குத் தகாது.” என்று கூற ஸ்ரீதர நாயக்கரும் அவரின் சீடர்களும் அவசரம் அவசரமாக அந்தச் சபையை விட்டு வெளியேறினார்கள்.



மற்றுமுள்ள தம் நண்பர்கள் அனைவரையும் பார்த்து ராமலிங்க அடிகளார், இது விஷயமாய் உங்களில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர் விக்கிரஹ ஆராதனைக்கு விளக்கம் கேட்ட நண்பரைப் பார்த்து, விக்கிரஹ ஆராதனை எல்லாரும் நினைப்பது போல் மூடப் பழக்கம் அல்ல.” என்று கூறிவிட்டு நிறுத்தினார். அனைவரும் தொடருங்கள் சுவாமி என்று அவர் மேலே சொல்லக் காத்திருந்தனர். அடிகள் பேச ஆரம்பித்தார். “மனம் வாக்குக்கு எட்டாத பிரம்மத்தை ஆராதனை செய்வதற்கு முதல் படியே விக்கிரஹ ஆராதனை. இதைச் செய்து வர வரத் தானே பிரம்மாநுபவம் ஏற்படும். இதைச் செய்யாமல் பிரம்மாநுபவம் ஏற்படாது.” என்று திட்டவட்டமாய்க் கூறினார். மேலும் விக்கிரஹத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment