Saturday, March 5, 2011

முருகனோடு சண்டை போட்ட பொய்யாமொழிப்புலவர்

பொய்யாமொழிப் புலவர்:

இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சரியாய்த் தெரியவில்லை. ஆனால் குருவின் மேல் அதீத பக்தி உள்ளவர். குருவின் கட்டளையைச் சிரமேல் கொண்டு அதைச் சரிவர நடத்தித் தருவார். இவர் தமிழில் கரைகண்டவர். மாகாளியின் அருளால் இவர் சொன்ன வாக்கும் பலிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் வரையில் இவருக்கே தன்னுடைய இந்தச் சிறப்புத் தெரியாமல் இருந்தது. ஒருநாள் குருநாதரின் தினைப்புலத்தைக் காவல் காக்கச் சென்றார். அந்த ஊரில் ஓர் முரட்டு வீரன் இருந்தான். அவன் பெயர் காளிங்கராயன். அவன் குதிரையும் அவனைப் போலவே முரடாக வளர்க்கப் பட்டிருந்தது. பொய்யாமொழிப் புலவரின் இயற்பெயர் என்ன என்பதும் யாருக்கும் தெரியாது. இவர் தினைப்புலம் காவல் காக்கும் நேரம் காளிங்கராயனின் குதிரை அங்கே வந்து மேய்ந்து பயிரை இஷ்டத்துக்கு அழித்துவிட்டது. புலவர் குதிரையை விரட்டினாலும் அது போகாமல் புலவர் மீது ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தது. செய்வதறியாது திகைத்த புலவர் எச்சரிக்கை உணர்வோடு ஒதுங்கிக் கொண்டு மாகாளியையும், தம் குருவையும் மனதில் நினைத்துக் கொண்டு,

“வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே

காய்த்த தினைப்புனத்துக் காலை வைத்துச் –சாய்த்துக்

கதிரை மாளத்தின்னும் காளிங்கன் ஏறும்

குதிரை மாளக் கொண்டு போ!” என்று பாடிவிட்டார். உடனேயே குதிரை துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. கனைத்த வண்ணம் கீழே விழுந்து இறந்துவிட்டது.



திகைத்தார் புலவர். தன்னுடைய பாடலுக்கு இப்படி ஒரு சக்தியா? வியப்பாய் இருந்தாலும் பயமாகவும் இருந்தது அவருக்கு. ஐயோ! என் செய்வேன், காளிங்கராயனுக்கு இது தெரிந்தால் நம்மைச் சும்மாவிடமாட்டானே? எனத் தம்மைத் தாமே நொந்து கொண்டு குருநாதரிடம் போய்ச் சொன்னார். குருநாதரும் பதறி அடித்துக் கொண்டு வேதனையோடு இறந்த குதிரையின் அருகே தம் சீடரோடு வந்து சேர்ந்தார். புலவரை ஒரு பார்வை பார்த்தார். உடனேயே குருவின் உள்ளத்தை உணர்ந்தவராய்ப் புலவர், “குதிரை மாளக் கொண்டு போ!” என்னும் அடியை மாற்றிக் “குதிரை மீளக் கொண்டு வா!” என்று பாடினார். என்ன ஆச்சரியம்?? அதிசயம்?? குதிரை உயிர்பெற்று எழுந்து துள்ளிக் கொண்டு ஓடியது வேகமாய். உடலை உதறிக் கொண்டு சென்ற குதிரையைப் பார்த்த குருநாதர் மனம் மகிழ்ந்து தன் பயத்தையும் உதறிவிட்டுச் சீடனைப் பார்த்து, “அப்பா, உன் வாக்குப் பலிக்கிறதே! இன்று முதல் நீ பொய்யாமொழிப் புலவன் என்னும் பெயர் பெறுவாய்!” என்று வாழ்த்தினார். பின்னர் பொய்யாமொழிப் புலவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் பாண்டியநாட்டிற்குச் சென்றார். அங்கே பாடல்கள் பாடி, சிலை உருவில் இருந்த சங்கப் புலவர்கள், கரக்கம்பம், சிரக் கம்பம் செய்யும்படிச் செய்து, பொற்றாமரைக் குளத்தில் ஆழத்தில் மூழ்கிக் கிடந்த சங்கப் பலகையை மேலே வந்து மிதக்க வைத்தார். இயல்பாகவே சிவபக்திச் செல்வரான இந்தப் பொய்யாமொழி, இன்னும் ஆலவாயனிடம் தீராத பக்தி பூண்டு, சிவனைத் தவிர, வேறொரு தெய்வமே இல்லை என்றும், வேறு எந்தக் கடவுளையும் பாடவும் மாட்டேன் என்றும் சொல்லி வந்தார்.



ஒரு நாள் பொய்யாமொழிப் புலவரின் முன் முருகன் தோன்றினான். “ புலவரே, உம் தமிழால் எம்மைப் பாடுவீராக! “ என்று கேட்க, புலவரோ, “கோழியைப் பாடிய இந்த என் வாயால் அதன் குஞ்சைப் பாடுவேனோ? அப்பனைப் பாடிய வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?” என்று சொல்லி மறுத்துவிட்டார். அவ்வளவில் மறைந்தான் முருகன். நாட்கள் சென்றன. வைகைக் கரையில் இருந்த தஞ்சாக்கூர் என்னும் ஊரில் தஞ்சை வாணன் என்பவர் வசித்து வந்தார். அவரைக்காணவேண்டிச் சென்றார் பொய்யாமொழிப் புலவர். வழியில் பாலை நிலக் காடுகள் இருந்தன. அந்தக் காட்டைக் கடந்தே செல்லவேண்டும். புலவர் சென்று கொண்டிருந்த போது, ஒரு வேடன் அவரை வழிமறித்தான். இடக்கையில் வில், வலக்கையில் அம்பு, தோளில் அம்புறாத்தூணி எனக் காட்சி அளித்தான் வேடன். இளைஞன். வசீகரமான முகம். முகத்தின் காந்தி பிரமிக்க வைத்தது. அவன் நிறமோ, செக்கச் சிவந்த சூரியனை ஒத்திருந்தது. இளம் சூரியனோ எனக் காட்சி அளித்த அந்த வேடன் தன் கண்களை உருட்டி விழித்துப் பயம் காட்டியதைக் கண்டார் புலவர். தம்மிடம் பொருள் ஏதும் இல்லை எனத் தெளிந்தார். வேடனும் புரிந்து கொண்டான் அவரிடம் பொருளில்லை என்பதையும் அவர் ஒரு புலவர் என்றும் அறிந்து கொண்டான்.



“ஹாஹ்ஹா! ஹாஹ்ஹா! புலவனா நீ? உன்னிடம் பொருள் இல்லையா? சரி, போகிறது, என் மேல் ஒரு பாடல் பாடு!” என்றான் வேடன். புலவர் சற்றுத் தயங்கினாலும், இவனிடமிருந்து தப்பவேண்டி, “சரியப்பா, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் முட்டை!” என்று பதில் வந்தது.

“பொன் போலும் கள்ளிப் பொறி பறக்கும் கானலிலே

என் பேதை செல்லற்கியைந்தனளே- மின் போலும்

மானவேல் முட்டைக்கு மாறாய் தெவ்வர் போம்

கானவேல் முட்டைக்குங்காடு!”

என்று பாடினார் புலவர். பாட்டின் பொருளாவது: முட்டை என்னும் பெயருள்ள இந்த வேடன் மின்னல் போல் மின்னும் கூர்மையான வேலை வைத்திருக்கிறான். இந்த அடர்த்தியான கருவேலங்காட்டுக்குள்ளே செல்லுபவர்கள் முட்டையின் எதிரிகளாய்த் தான் இருக்க முடியும். சூரிய வெப்பத்தினால் இந்தக் காட்டுக் கள்ளிச் செடிகள் எல்லாம் தீப்பிடித்து எரியும். அத்தகைய இந்தக் காட்டுக்குள் பேதையும், இளம்பெண்ணுமாகிய என் மகள் தன் தலைவனோடு செல்ல இசைந்தாளே!” என்பது இதன் பொருள்.



பாடலைக் கேட்ட வேடன் பெரிதாகச் சிரித்தான். “புலவா, உன் பாட்டில் உண்மை ஏதுமே இல்லை, ஆனால் நீ பொய்யாமொழி என அறிமுகம் செய்து கொண்டாயே? தண்ணீர் இல்லாமல் வெப்பம் தாங்காமல் கள்ளிச் செடிகள் காய்ந்துபோய்த் தீப்பிடிக்கும் நிலையில் இருக்கும்போது அங்கே கருவேலமுட்கள் மட்டும் எப்படித் தாக்குப் பிடிக்கும்? என்ன புலவன் நீ? இதோ, நான் பாடுகிறேன், பார்!” என்று சொல்லிவிட்டு வேடன் பாடலை மாற்றிப் பாட(பாடல் கிடைக்கவில்லை, கிடைத்தவர்கள் இடலாம்) பாடலையும் பொருளையும் கேட்ட புலவர் திகைத்துப் போனார். வேடன் அவர் திகைப்பை லட்சியம் செய்யாமல், மேலும், “முட்டை பெரிதா, குஞ்சு பெரிதா?” என்று புலவரிடம் கேட்க, “குஞ்சு தான் பெரியது!” என்றார் புலவரும். அப்படியானால் முட்டையைப் பாடிய வாயால் அதைவிடப் பெரிய குஞ்சையும் பாடு!” என்று சொல்லி வேடன் மறைந்தான். புலவருக்குள் ஏதோ மாற்றம். வந்தவன் சாமானியன் அல்ல. வேடனும் அல்ல. சற்றே யோசித்தார் புலவர்.

தம் கனவில் வந்து தன்னைப் பாடச் சொன்ன முருகனும், தாம் அதற்கு மறுத்ததும், கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடமாட்டேன் எனச் சொன்னதும் நினைவில் வந்தது. அதனால் தான் முருகனே வேடனாய் வந்து முட்டையைப் பற்றித் தம்மைப் பாட வைத்துத் தம் அறியாமையைப் போக்கித் திகைப்பை உண்டுபண்ணி உள்ளான் எனப் புரிந்து கொண்டார் புலவர். வந்தது வேறு யாரும் அல்ல, முருகனே எனவும் அறிந்து கொண்டார். புலவரின் ஆணவம் அகன்றது. அன்றிலிருந்து வித்தியாசம் பார்க்காமல் தெய்வங்களைக் குறித்துப் பாடி வந்தார் பொய்யாமொழிப் புலவர். இவரின் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது. இந்தப் புலவரைப் பற்றிய திரைப்படம், “சிவகவி” என்னும் பெயரில் திரு எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்து வெளிவந்து பல நாட்கள் ஓடியதாய்த் தெரிய வருகிறது.

No comments:

Post a Comment