Friday, January 14, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!


புவனியில் போய்ப்பிறவா மையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி
திருப்பெருந் துறைஉறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருனையும் நீயும்
அவனியில் புகுந்துஎமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !


புவனியில் போய்ப்பிறவா மையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி= இந்த பூவுலகத்து மாந்தர்கள் அனைவருமே புண்ணியம் செய்தவர்கள். ஈசனின் அருள் நேரடியாக அவர்களுக்குக் கிட்டி விடுகிறது. அவன் அவர்களை ஆட்கொண்டு அருள் புரிகிறான். ஆனால் விண்ணுலகில் இருக்கும் நாமோ பூவுலகில் போய்ப் பிறந்து ஈசனைத் துதிக்கும் நாள் எது எனப் புரியாமல் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருக்கிறோமே. இந்த பூமியே சிவன் ஆட்கொள்ளவேண்டியே அன்றோ ஏற்பட்டிருக்கிறது!

திருப்பெருந் துறைஉறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்= திருப்பெருந்துறையில் இருக்கும் ஈசனை நினைந்து இவ்வாறு திருமாலும், பிரமனும் ஆசை கொள்கின்றனர். அத்ஹகைய பெருமை வாய்ந்த பெருந்துறை வாழ் ஈசனே!

நின் அலர்ந்த மெய்க் கருனையும் நீயும்
அவனியில் புகுந்துஎமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே ! =நீயும் உன்னுடன் கூடவே இருக்கும் உன்னை விட்டு எந்நாளும் பிரியாத சக்தியாகிய உமை அன்னையும் இந்த பூமிக்கு வந்து எம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறோம். கிடைக்காத பேரமுதே, ஈசனே பள்ளி எழுந்தருள்வாயாக. குண்டலினி யோகத்தில் குண்டலினியைச் சக்தியாகவும், அது மேலே சென்று சஹஸ்ராரத்தைச் சென்றடைவதை சிவசக்தி ஐக்கியம் என்றும் கூறுவார்கள். தம் உள்ளத்தையே திருப்பெருந்துறை என்னும் ஊரில் இருக்கும் கோயிலாகக் கொண்ட மாணிக்கவாசகர், தம் உடலில் உள்ள சக்தி சிவனோடு சேர்ந்து ஐக்கியம் அடைந்து தாமும் இறைவனோடு ஒன்றுபடவேண்டும் என்று விரும்புகிறார். அதற்காகவே உள்ளக் கோயிலில் ஈசனைப் பள்ளி எழுந்தருளச் செய்கின்றார்.


உரை எழுத உதவி செய்த நூல்: திருவாசகம் எளிய உரை பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள், சிங்கப்பூர் திருமுறை மாநாட்டுக்குழுவினரால் வெளியிடப் பட்டது.

Thursday, January 13, 2011

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!


விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்
எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்=ஒளிமயமான விண்ணுலகில் வசிக்கும் தேவர்களும் அணுகமுடியாத , காணமுடியாத இறைவன், ஒளியும், இருளும் நிறைந்த பூமியில் வசிக்கும் நம் போன்ற அடியார்களும் தொண்டு செய்து உய்யுமாறு

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்= இந்த மண்ணகத்துக்கு வந்து நம்மை எல்லாம் வாழச் செய்தான். நாம் பிறவி எடுத்ததே இவ்வண்ணம் இறைத்தொண்டு செய்யவேண்டியே. அதுவும் பரம்பரை பரம்பரையாய்ச் செய்து வருகிறோம். வண்மை பொருந்திய திருப்பெருந்துறை ஈசனே, உமக்கு நாங்கள் வழி வழியாய் அடியார்களாய் இருக்கின்றோம்.

கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்= எங்கள் கண்ணின் மணியாக இருந்து எங்களுக்குப் பார்வையைத் தந்து களிப்படைய வைக்கும் தேனினும் இனியவனே, பாற்கடலில் வந்த அமுதானவனே, நற்கரும்பே, இங்கே கரும்பைச் சுட்டியது அடிமுதல் நுனி வரையிலும் இனிப்பான கரும்பைப் போல் ஈசனும் இனிமையானவன் என்பதற்காக. உம்மை விரும்பி நாடிடும் அடியார்கள்

எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே= எண்ணத்திலே உணர்வு பூர்வமாய் எழுந்தருளி இருப்பவனே. உலகத்து உயிர்கள் அனைத்துக்கும் உயிர் தந்து காத்து ரக்ஷித்து ஆள்பவனே, எம்பெருமானே, எம் உள்ளத்தில் வந்து பள்ளி எழுந்தருள்வாய்.

Tuesday, January 11, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந்து அருளிய பரனே !
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்= தொடக்கம் இல்லாதவன் இறைவன். அதே போல் முடிவும் இல்லாதவனும் அவனே. முன்னைப் பழம்பொருள்கட்கும் முன்னைப் பழமையானவன். அதே சமயம் பின்னைப்புதுமைக்கும் புதுமையானவன் ஆவான். தோன்றி, மறையும் உயிர்களின் முதலும், நடுவும், முடிவுமாக ஈசன் இருந்து வருகிறார்.
இப்படித் தானே எல்லாவற்றுக்கும் காரணமாக அமைந்து, அவற்றின் முடிவுக்கும் காரணமாக அமைந்திருக்கும் ஈசனின் இந்த இருமையான நிலைப்பாட்டை பிரம்மாவோ, விஷ்ணுவோ அல்லது ருத்ரனோ அறியமாட்டார்கள். அவ்வாறிருக்கும்போது உன்னை வேறொருவரால் எளிதில் அறியமுடியுமா?


பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந்து அருளிய பரனே != இங்கே பந்து வந்து அணையும் விரல்களை உடைய உமை என்ற பொருள் வந்தாலும், நம்முடைய ஆன்மாவையும் குறிக்கும். ஆன்மாவைச் சிவத்தோடு சேர்த்து இணைக்க உதவுவது சக்தியே. அந்தச் சக்தியின் விரல்கள் என்ற பொருளிலும் வரும். அந்தச் சக்தியும், நீயும் இந்தப் பழைய ஓட்டைக் குடிசையில் வசிக்கும் என் போன்ற அடியார்களுக்கு அருளவென்று எழுந்தருளும் பராபரனே/ இங்கே பழங்குடில் என்பது நம் உடலைக் குறிக்கும். பிறவி தோறும் ஈசன் நம் உடலில் குடிகொண்டே இருப்பதால், நம்முடைய உடல் என்னும் குடிசை ஈசனுக்குப் புதியது அல்ல. ஏற்கெனவே அவர் குடியிருந்த இடமே ஆகும். நாம் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆகையால் நம் ஆன்மாவைச் சிவத்தோடு ஒன்ற வைக்கும் சக்தி வாய்ந்த உமை அம்மை பந்தங்களில் இருந்து நம்மை விடுவித்து ஈசனோடு சேர்த்து வைக்கவேண்டும்.


செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி= . சிவந்த தழல் போன்ற திருமேனியைக் காட்டித் திருப்பெருந்துறையையும், அந்த ஊரின் கோயிலையும் காட்டி. அதாவது மாணிக்கவாச்கருக்குத் தம் உள்ளே இருக்கும் ஜோதி சொரூபமான இறைவனையும், அவன் இருக்குமிடமே சிற்றம்பலம் என்பதையும் காட்டித் தந்தது ஈசனே ஆவான்.
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !=இங்கே மாணிக்கவாசகர் அந்தணனாக ஈசன் அவர் முன்னே வந்து அவரை வலிய ஆட்கொண்டதைக் குறிப்பிடுகிறார். ஞானாசிரியனாகக் குருந்த மரத்தின் நிழலில் மாணிக்கவாசகருக்காகக் காத்திருந்து அவருக்கு உண்மைப்பொருளை உபதேசம் செய்ததை இங்கே கூறுகிறார்.
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே ! =இத்தகைய பெருமை வாய்ந்த அடைவதற்கு அமுதமான பரம்பொருளே, பள்ளி எழுந்தருள்வாயாக!

Monday, January 10, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
அரிதுஎன எளிதுஎன அமரரும் அறியார்
இதுஅவன் திரூஉரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்குஎழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கை உள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

இத்தனை பாடல்களிலும் திருப்பெருந்துறையைப் பற்றி மட்டுமே பேசிய மாணிக்கவாசகர் இந்தப்பாடலில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய், எனவும் அழைத்துள்ளார். இது புராணப் படி ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊரான உத்தரகோசமங்கை ஈசனைக் குறிக்கிறது. இந்தக் கோயிலில் தான் ஐயன் உமை அன்னைக்கு வேதாகம ரகசியங்களில் இருந்து அனைத்தையும் கூறினார் என்றும் அன்னைக்கு உபதேசம் செய்தமையால் உத்தரகோசமங்கை எனப் பெயர் பெற்றதாயும் கூறுவார்கள். மேலும் இந்தக் கோயிலிலேயே ஐயன் ஆடிய ஆநந்தத் தாண்டம் முதல் முதல் அன்னை மட்டுமே காணும்படி ஆடப் பட்டது என்றும் கூறுவார்கள். மேலும் இதை ஆதி சிதம்பரம் எனவும் அழைப்பார்கள்.

மிகவும் பழமையான இந்தத் தலம் ஒரு காலத்தில் இலவந்திகைப் பள்ளி என அழைக்கப்பட்டதாயும் தெரியவருகிறது. மேலும் மண் தோன்றும்போதே தோன்றிய மங்கை என்றும் இந்த ஊரைக் குறிப்பிடுவதாயும் தெரியவருகிறது. ராவணனின் மனைவியான மண்டோதரியின் பெயரை இந்தக் கோயிலின் வரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது. அவளுக்குக் காக்ஷி கொடுக்கவேண்டி, தென்னிலங்கை சென்றாராம் ஈசன் உமை அன்னையுடன். அது தனியாப் பார்ப்போம். அறையில் ஆடினால் அம்பலத்துக்கு வராமல் இருக்குமா என்ற வழக்குச் சொல்லும் இந்தக் கோயிலில் ஈசன் ஆடிய ஆட்டத்தைக் குறிக்கும் விதமாகவே ஏற்பட்டது என்பார்கள். இங்கே அன்னை காண அறையில் ஆடிய ஈசன், அதன் பின்னரே சிதம்பரம் வந்து அம்பலத்தில் ஆடியதாய் ஐதீகம்.

இவை பொதுவான கருத்தாக இருந்தாலும் இதன் உட்கருத்து. நம்முள்ளே குடி கொண்டிருக்கும் அருட்பெரும் சோதியானது நம் மனமாகிய கோயிலில் எழுந்தருளி நம்மை அதனோடு ஒன்று படுத்தி நம்மை ஐக்கியப் படுத்திக்கொள்வதையே குறிக்கும் என்று ஆன்றோர் வாக்கு. நம் உடல் ஐந்து கோசங்களால் ஆனது என்பதை அறிவோம் அல்லவா? அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மநோமய கோசம், விக்ஞானமய கோசம், ஆநந்தமய கோசம் ஆகிய ஐந்து கோசங்கள் நம் உடலில் இருப்பதாக யோகிகள், ஞாநிகள் கூறுவார்கள். இவற்றில் ஆநந்த மயகோசத்தில் இருக்கும் இறைவனைக் கண்டறிவதே, கண்டறிந்து அவனுடன் ஒன்றிணைவதே நம் ஜீவனின் முக்கியக் குறிக்கோள். இந்த ஆநந்தமயகோசமே உத்தரகோசம், நம் உடலில் தலைப்பகுதியில் இருப்பதால் கூறப்படுகிறது. அதனால் தன்னை ஒரு மங்கையாகப் பாவித்துக்கொண்டு மாணிக்கவாசகர் ஈசனோடு, அதாவது இறை உணர்வோடு ஒன்றுபட வேண்டியதே இந்தப் பள்ளி எழுச்சிப் பாடலின் முக்கியப்பொருள் ஆகும்.

அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
அரிதுஎன எளிதுஎன அமரரும் அறியார்= இறைவனைக் கண்டவர் இலர், அவன் எப்படிப்பட்டவன் என அறிந்தவர் இல்லை. ஆகவே இறைவனின் அருள் சுவையானது இன்னமாதிரி, இன்ன சுவையில் இருக்கும், இந்தப் பழத்தைச் சாப்பிடு இதுதான் இறைத்தன்மை என்று கூற முடியுமா? முடியாதன்றோ. அவ்வாறு இதுதான் அமிர்தம் சாப்பிடு, கருத்தைச் சொல் எனக் கூற முடியுமா? இறைத் தன்மை எங்கனம் என்பதை உணர்தலே முடியும். அதற்கு அவனடியார்களாக இருத்தல் வேண்டும். மற்றவர்களால் இயலாத ஒன்று.

அதே போல் அவனை அறிதலும் கடினம். இறைவனை அறிவதற்கு ஞானக்கண் தேவை. அவனுடைய அருளாலேயே ஞானம் சித்திக்கும். அந்த அருளைப் பெற்ற அடியார்களாலேயே ஈசனைக் கண்டு களிக்க முடியும். தேவாதிதேவரானாலும் ஈசனின் அருள் இல்லை எனில் அவரும் அறியமாட்டாரன்றோ.

இதுஅவன் திரூஉரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்குஎழுந்து அருளும்= அவன் திருவுருவம் இப்படி இருக்கும், இத்தனை உயரம் ஈசன், இத்தனை பருமன் ஈசன், கை இப்படி இருக்கும், கால் இப்படி இருக்கும் கண்கள் இவ்வாறு இருக்கும் என்றெல்லாம் எவரால் கூறமுடியும்? எவரும் கண்டு, விண்டு,அறுதியிட்டுக் கூற முடியாதே. உம்மைக் காண விரும்பி நாங்கள் தவிக்கிறோம். ஆகவே எங்களை நீர் ஆட்கொள்ள இங்கே வந்து எழுந்து அருளும்,


மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கை உள்ளாய்திருப் பெருந்துறை மன்னா= திரு உத்தரகோசமங்கை மன்னா, நம் உடலில் உள்ள ஐந்து கோசங்களிலும் உச்சியில் உள்ள கோசம் உத்தரகோசம், அங்கேதான் ஈசனோடு ஐக்கியம் ஆதல் நடக்கும் என்பது யோகியர் கூற்று. ஆகவே இந்த ஐந்து கோசங்களையும் கடந்து உத்தரகோசத்தில் இணையத் துடிக்கும் மங்கையாகிய என்னை , திருப்பெருந்துறை மன்னனாகிய நீர்

எது எமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்= உமக்கு எவ்விதம் நாங்கள் தொண்டாற்றினால் எங்கள் குறிக்கோள் நிறைவேறுமோ, அதை அந்த வழியை ஞானத்துக்கு இட்டுச் செல்லும் வழியை நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு உன் அருளாகிய சுவையைக் கொடுத்து எங்களுக்கு ஞானமாகிய கண்களைத் திறந்துவிட்டு, எங்களை ஆட்கொள்ளவேண்டி, எங்கள் உள்ளமாகிய பள்ளிஅறையில் இருந்து
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.= பள்ளி எழுந்து வந்து எங்களுக்கு அருள் புரிவாய்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்= இங்கே பப்பற வீட்டிருந்து என்பதற்குப் பொருள் பலவிதமாய்க் கொள்ளப் படுகிறது. பரபரப்பும், அவசரமும் மிகுந்த இவ்வுலக வாழ்க்கையைக் குறிக்கும் என்பர் சிலர். இன்னும் சிலர் குறிப்பிட்ட பரப்பளவைக்குறிக்கும் இடத்தில் இருந்து எல்லையற்ற பெருவெளிக்கு வந்து இறைத்தத்துவத்தை உணர்ந்ததைக் குறிக்கும் என்பர் சிலர். மேலும் சிலர் பல்வேறு பிறவிகள் எடுத்துப் பல்வேறு விதமான இன்பங்களையும், துன்பங்களையும் அநுபவித்து மனம் நொந்து அலுத்துப் போய் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கும் என்பார். இப்படியானதொரு துன்ப வாழ்க்கையிலிருந்து மீட்டு எம்மை உம்முடைய எல்லை இல்லாப் பெருங்கருணையால் ஆட்கொள்ளவேண்டும் என்று மாணிக்கவாசகர் கூறியதாய்க் கொள்ளலாம். இறைத் தத்துவத்தை அறிந்த உம் அடியார்கள் பந்த, பாசங்களையும் அறுத்தவர்கள் என இங்கே குறிப்பிடுகிறார்.

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா= எமை ஆட்கொண்ட உமையின் மணவாளனாகிய ஈசனே, அத்தகைய அடியார்கள் மானுடத்து மனிதர்களின் இயல்பை ஒட்டி உம்மைக் காதலனைப் பிரிந்த காதலி போல் நினைந்து நினைந்து உருகிக் கனிந்து கசிந்து வணங்குகின்றனர்.

செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!= அழகிய சிறந்த தாமரை மலர்கள் மலர்ந்துள்ள குளங்கள் நிரம்பிய குளிர்ச்சி பொருந்திய வயல்கள் உடைய திருப்பெருந்துறை உறையும் ஈசனே, சிவகாமி நேசனே, மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு என்று ஏற்பட்டு தொல்லைப்படாமல் எம்மைத் தடுத்து ஆட்கொண்டு இந்தப் பிறவியிலேயே இறவாமை பெற்று எம்மைச் சுத்தமான அருள் ஒளி பெற்று நிலைத்து இருக்க ஆட்கொண்டு அருள்வாய். எம்பெருமானே , என்னுள்ளே குடிகொண்டிருக்கும் உள்ளக் கோயிலில் பள்ளி எழுந்தருள்வாயாக.

Sunday, January 9, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் சோதி!

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவு இலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்
சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவு இலன் என நினைப்புலவோர்= ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை. இந்த மண், விண், நீர், காற்று, நெருப்பு என அனைத்திலும், பஞ்சபூதங்களிலும் அவன் நிறைந்துள்ளான். அதே போல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரிடத்திலும் ஆண்டவனே உறைந்துள்ளான். அவனுக்குத் தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை என்பது போல் போவதும் இல்லை வருவதும் இல்லை. அவன் நிரந்தரமானவன். குறைவற்றவன், பரிபூரணமானவன்.


கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்= எப்போதோ யாரோ ஒருவர் உம்மைக் கண்டிருக்கிறார். கண்டு மெய்ஞானத்தை உணர்ந்து அதைப் பாடலில் வடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உம் அடியார்கள் அனைவரும் உன் மேல் கீதங்களைப் பாடியும் ஆடியும் வருகின்றனர். எங்கும் நிறைந்துள்ள உன்னை வெளியில் மட்டும் காணமுடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். பாடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர உன்னைக் கண்டு அநுபவித்தவர்களின் உணர்வைக் கேட்டு அறியோம். உள்ளும் புறமும் ஒன்றாக ஒரே நினைப்பாக உன்னைத் தியானித்தால் அன்றோ நாங்கள் உன்னை உள்ளே கண்டு உணர முடியும்??

சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து= குளிர்ந்த செழிப்பான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறைக்கே நீ மன்னன் அல்லவோ, எம் தலைவா நீ எங்களால் சிந்தித்து உணர்தலுக்கும் அரியவன் அன்றோ? உம்மைச் சிந்தித்து உணர்வது அன்றோ எம் தொழில்! எங்கள் முன்னே நீ வந்து


ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. = எங்கள் அளப்பரிய துன்பங்களை எல்லாம் அகற்றி எம்மை ஆட்கொண்டு அருள் பாலிப்பாய் எம்பெருமானே. எங்கள் உள்ளமாகிய பள்ளி அறையில் நாங்கள் காணும் வகையில் பள்ளி கொண்டு அருள்வாய்!

Friday, January 7, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருப்பள்ளி எழுச்சி நான்காம் பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே

நம்மைப் போல் ஈசனும் தூங்குவான் என எண்ணி அவனையும் பள்ளியறைக்கு அனுப்புவதை ஒரு மரபாகப் பின்பற்றி வருகிறோம். உண்மையில் ஈசன் எந்நேரமும் இயங்கிக்கொண்டே அல்லவா இருக்கிறான்?? பஞ்சபூதங்களால் ஆன இந்த மானுட உடல் அல்லவோ ஓய்வுக்குப் போகிறது?? அவ்வாறு உடலுக்கு ஓய்வு கொடுக்கும் நாம் நமது உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்கக் கூடாது என்பதே இந்தப் பள்ளி எழுச்சியின் முக்கிய நோக்கம். நம் உள்ளே குடி கொண்டிருக்கும் ஈசனை எழுப்புவதான் ஐதீகத்தை முன்னிட்டு நம் உள்ளத்துள்ளே உறையும் இறை உணர்வை அன்றோ தட்டி எழுப்புகிறோம்.

இந்த அதிசயக்காட்சியில் வீணை இசைக்கிறது. யாழ் இசைக்கிறது. அதோடு வேத கோஷங்கள் எழும்புகின்றன.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்= வீணைகளைக்கையில் எடுத்துக்கொண்டும், யாழை மீட்டிக்கொண்டும் இசை பாடுகிறவர்கள் ஒருபுறமும், ரிக் முதலான வேதங்களில் இருந்து வேத கோஷங்களைப் பாடுபவர்கள் ஒருபக்கமும்,

துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்= இறைவனுக்குச் சூடுவதற்கெனவே மலர்மாலைகளை ஏந்தியவண்ணம் சிலரும்,

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்= மலர்மாலைகள் இல்லாமல் தங்கள் பக்தியையே அவனுக்கு மாலையாகச் சூட்டி தங்களை மறந்த பக்தியில் ஈசனின் திருவுருவைப் பார்த்து அழுது, தொழுது, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குபவர்களும்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே= தங்கள் சிரத்துக்கும் மேல் இரு கைகளையும் கூப்பியவண்ணம் வணங்குபவர்கள் இன்னொரு புறமுமாகக் காண்கின்றனர். திருபெருந்துறை உறையும் சிவபெருமானே,

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்= இவ்வளவு பக்தர்களின் பக்திக்கு முன்னால் என் போன்ற சாமானியர்களின் பக்தியையும் ஏற்றுக்கொள்ளும் எம் ஈசனே, என்னையும் ஆட்கொண்டு அருளி, எனக்கென இன்னருளைப் பொழியும் தலைவனே,

எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே=என்னுள்ளே உள்ள இறை உணர்வைத் தட்டி எழுப்பச் செய், எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாய், என்னுள்ளே நீ உனக்குரிய இடத்தில் அமர்வாய்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருப்பள்ளி எழுச்சி மூன்றாம் பாடல்:

கூவின பூங்குயில்கூவினகோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்= அதிகாலை நேரம் குயில் கூவித் துயில் எழுப்பும், கோழிகள் கொக்கரக்கோ எனக் கத்தும். அப்படி திருப்பெருந்துறையிலும் குயில்கள் கூவ, கோழிகள் கூவ, மற்றப் பறவைகளும், நாரைகளும் ஒலி எழுப்ப, கோயில்களிலும் வீடுகளிலும் எம்பெருமானின் வழிபாடலுக்கான சங்கங்கள் ஆர்ப்பரித்தன.


ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்=விண்ணிலே நக்ஷத்திரங்களின் ஒளி மங்கிக்கொண்டு உதய காலத்து அருணோதயத்தைத் தொடர்ந்து சூரியனின் ஒளி பரவத் தொடங்குகிறது. இந்நிலையில் இவ்வுலக வாழ்க்கையில் பற்றும், பாசமும் கொண்டிருந்த எங்களுக்கு உன்னிடம் விருப்பமும், பக்தியும் ஏற்பட்டிருக்கிறது, எங்கள் ஈசனே.


தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= திருப்பெருந்துறையில் உறையும் எங்கள் ஈசனே, சிவனே, எங்களின் இந்த பக்தியைக் கண்டு எங்கள் மேல் அன்பு பூண்டு எம்மை ஆட்கொள்ள உன் திருவடித் தாமரைகளை எங்களுக்குக் காட்ட மாட்டாயா? உன்னை எங்கள் ஐம்பொறிகளாலும், அறிவாலும், மனத்தாலும் ஆழ்ந்து அநுபவிக்க முடியாது. அருள் அநுபவம் பெற்றாலே அநுபவித்து உணர முடியும். அத்தகைய அநுபவத்தை எங்களுக்குக் கொடுத்து எங்களை ஆட்கொண்டு அருள் புரிவாய்.

யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.= அனைவராலும் அறிய முடியாதவனே, ஆனால் உன் அடியார்கள் மட்டுமே அறியக் கூடிய தன்மை கொண்டவனே, எமக்கு என்றும் எளியவனாக இருப்பவனே, இறை அருள் அநுபவம் இல்லை எனில் உன்னை அறிவது எங்கனம்?? பக்குவம் அடைந்த ஆன்மாக்களால் மட்டுமே இறைவனை அறியவும் உணரவும் முடியும். மாணிக்க வாசகர் உணர்ந்து அறிந்திருந்தார்.

Thursday, January 6, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருப்பள்ளி எழுச்சி இரண்டாம் பாடல்


அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்
அகன்றது உதயநின்மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலம் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன் இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருள்வாயே!

அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்
அகன்றது= இந்திரன் கிழக்குத் திசையின் அதிபதி. அந்தக் கீழ்வானில் உதயசூரியன் வரும்முன்னர் தோன்றும் செவ்வானம் அருணோதயம் உண்டாகிவிட்டது. இருள் அகன்றது ஒளி பிறந்தது. இங்கே மனமாகிய ஆகாயத்தில் இறைவனின் சோதிவடிவாகிய உதயத்தைக் கண்டதும், மனதின் மாசாகிய இருள் நீங்கி மனம் அந்த சோதி வடிவான ஒளியால் நிறைந்தது எனக் கொள்ளலாம்.


உதயநின்மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலம் கண்ணாம்= ஈசனின் திருமுகம் ஒரு தாமரை மலர் போல் தோன்றுகிறது. அதிலிருந்து அவன் அருளெல்லாம் கருணை எல்லாம் சோதிவடிவான சூரியன் போல் பிரகாசமாய் எழுகிறது. அவனுடைய கருணையாகிய பிரகாசத்தின் காரணமாய் அவன் அருட்பார்வை பார்க்கும் கண்மலர்கள் மெல்ல மெல்ல விரிந்து மலர்கின்றன. அவனுடைய கண்ணின் கருமணிகள் தெரியும் வண்ணம் மலர்ந்து தெரிகின்றன அந்தக் கண்கள்.

திரள்நிரை அறுபதம் முரல்வன் இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= அந்தக் கண்மணிகளைப் பார்த்தால் வண்டுகள் எனத் தோன்றுகின்றன. மலர்களில் ரீங்காரம் செய்யும் வண்டுகள் அந்தக் கண்மணிகளைத் தங்கள் வண்டினம் என நினைக்கின்றன. அந்தக் கருவண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றுவது இனிய கீதம் இசைப்பதைப் போல் இருக்கிறது. ஈசனின் கண்களை வணங்க வந்த அடியார்களும், தேவாதிதேவர்களும் பாடும் பாமாலைகளைப் போல் அவை விளங்குகின்றன. திருப்பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானே,


அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருள்வாயே!= என் ஈசனே, எங்களுக்கெல்லாம் அருளாகிய பெரும் நிதியைத் தரவரும் ஆனந்த மலையே, கைலையில் நவரத்தினங்களும், குபேர பண்டாரமும் இருப்பதாக ஐதீகம். கைலை சென்றால் அவை கிடைக்கும், ஆனாலும் அவையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும், ஆனால் ஈசனிடமோ அருளாகிய நிதி எடுக்க எடுக்கக் குறையாவண்ணம் கொட்டிக்கிடக்கிறது. அடியார்களுக்கு அவன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறான். அனைவருக்கும் சொல்லவொண்ணாப் பேரின்பம் கிடைக்கிறது.

Wednesday, January 5, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

திருப்பள்ளி எழுச்சி முதல் பாடல்

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளி எழுச்சி திருப்பெருந்துறையில் பாடியவை. திருப்பெருந்துறை நீர் வளமும், நில வளமும் பொருந்திய ஓர் ஊராகும். அங்குள்ள ஈசனைக்குறித்துப் பாடிய இப்பாடல்கள் மாணிக்கவாசகர் தம் உள்ளத்துள்ளே உறையும் இறைவனை உள்ளத்திலே பள்ளி எழுந்தருளச் செய்து பின் அவனோடு ஒன்றிணைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எனக் கூறுவார்கள்.

வளம் பொருந்திய திருப்பெருந்துறை வயல்களில் செந்தாமரை மலர்ந்து குலுங்குகிறாப் போல் நம் உள்ளத்தாமரையும் ஈசனின் எல்லை இல்லாப்பெருங்கருணையால் மலர்ந்து கொள்கிறது.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு= என் வாழ்க்கையின் அடிப்படையே ஈசனாகிய பரம்பொருளே ஆகும். அத்தகைய பரம்பொருளே உனக்குப் போறி. நின் திருவடித் தாமரையைத் தொழுது கொள்கிறேன். அதிலே அருமையான பூங்கழல்களால் அர்ச்சிக்கிறேன். இப்போது இருள் நீங்கிப் பொழுது புலரும் வேளை ஆகிவிட்டது.

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்= என் ஐயனே, உன் திருமுகதரிசனமும், அதில் விளங்கும் குறுமுறுவலும் எமக்குச் செய்யும் அருளை என்னென்று கூறுவது? உன் திருவடி நாதம் பிரணவநாத ஒலியன்றோ?? அத்தகைய நாதம் ஒலிக்க வீரக் கழல்களைத் தாங்கி நிற்கும் உன் திருவடித் துணை எங்களுக்கு எப்போதும் வேண்டும். அத்தகைய திருவடியை நாங்கள் தொழுது ஏத்துகிறோம்.


சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= தாமரை மலருவது சேற்றிலே ஆனாலும் அது சேற்றை விட்டு மேலே எழும்பி நிற்கும். தனித்துத் தெரியும், சேறு மட்டுமில்லாமல் அந்தக் குளத்து நீரும் அதில் ஒட்டாது. அவ்வாறே இவ்வுலகவாழ்க்கையில் பற்றில்லாமல் ஈசனிடம் கொண்ட பக்தியையே எந்நேரமும் நினைந்து திருப்பெருந்துறையாகிய இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் ஈசனை வழிபடுகிறோம். இங்கே தாமரை மலர்வது நம்முள்ளே மனத்தாமரை உள்ளே இருக்கும் அருட்பெரும்சோதியைக் கண்டு மலருவதைச் சுட்டுகிறது. சேறு என்பது நம் மனதில் தோன்றும் இவ்வுலகத்துப் பற்றுடைய எண்ணங்களைக் குறிக்கும். அத்தகைய சேறு நிறைந்த எண்ணங்களையும் மீறிக்கொண்டு ஈசனிடம் வைத்த பக்தியானது மலர்ந்து தாமரை மலர் போல் முகம் காட்டிச் சிரிக்கிறது.

ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!=எருது பொறுமைக்குப் பெயர் போனது. எவ்வளவு பாரமானாலும் தாங்கிக்கொள்ளும். எவ்வளவு துன்பமானாலும் தாங்கிக்கொள்ளும். அத்தகைய எருதைத் தனக்குக் கொடியாகவும், வாகனமாயும் கொண்டுள்ள ஈசனோ அவன் தன்மையையும், உண்மையையும் சொல்லி முடியுமா? அவன் நம்மையும் ஆட்கொண்டுவிட்டானே. ஆகவே நம்முள்ளே உள்ள ஜோதிவடிவான ஈசன் எழுந்தருளத் திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.

Tuesday, January 4, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நி ன் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.

இங்கே ஈசனின் திருவடித் தாமரைகளின் சிறப்புக்களையும் அவை செய்யும் அருள் பற்றியும் பேசப்படுகிறது. பிரமனும், திருமாலும் எவ்வளவு முயன்றும் அடி,முடி காண முடியாமல் வியாபித்து சோதி வடிவில் எழும்பி நின்ற ஈசன், அடியார்களுக்கு எனத் தன் திருவடிகளைக் காட்டி அவர்களைக் காத்து அருள்கிறான். திருவடி தரிசனம் பொதுவாகவே சிறப்புப்பெற்றது. ஈசனின் திருவடிகளைச் சரணம் எனப் பிடித்தவர்களை உய்விக்க வந்த ஐயனின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ?

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்= ஆதியும் ஈசனே, அந்தமும் ஈசனே, அவனே முதலும், முடிவும் ஆவான். அத்தகைய ஈசனின் பாதாரவிந்தங்கள் இவ்வுலகில் ஆதியொ தோன்றியவை. எல்லாவற்றுக்கும் முதலாகிய அந்தத் திருவடித் தாமரைகளைப் போற்றிப் பாடுவோம். ஈசன் நமக்கு அருள் செய்வான்.

போற்றி அருளுக நி ன் அந்தமாம் செந்தளிர்கள்= சம்ஹார காலத்தில் இந்தப்பாதங்களே சம்ஹாரத் தாண்டவம் ஆடி அனைத்தையும் தன்னுள் ஒடுங்கச் செய்யும், ஆகவே அந்தமும் இந்தப்பாதாரவிந்தங்களே. நம்மைப் பாதுகாக்கும் இந்தப் பாதாரவிந்தங்களிலேயே கடைசியில் நாம் சரணும் அடைகிறோம். அத்தகைய சிவந்த திருவடிகளை எமக்கு அருள்வாய் ஈசனே.

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்= சிருஷ்டி ஆரம்பிக்கும்போது அனைத்து உயிர்களுக்கும் தோற்றமாய் அருளுவதும் ஈசனின் இந்தப்பொற்பாதங்களே ஆகும். அத்தகைய பாதங்களுக்குப் போற்றி பாடி வாழ்த்துவோம். ஈசனே எம்மைக்காத்தருளுக

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்= உயிர்கள் தோன்றக் காரணமாய் இருந்த அந்தப் பொற்பாதங்களே, கொன்றை மலர்கள் அணிந்த அந்த வீரக் கழல்களே உயிர்களின் போக உணர்ச்சிக்கும் காரண்மாய் அமைந்தது. அத்தகைய திருவடிகளுக்குப் போற்றி. எம்மைக் காத்தருள்வாய் ஈசனே.

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்=பிரளயம் வந்து உலகு ஒடுங்கும் வேளையில் அனைத்து உயிர்களையும் தம்முள் ஒடுங்கி ஓய்வு கொடுக்கும் இந்தத் திருவடிகளுக்குப் போற்றி.

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் = நான்முகனும், திருமாலும் எவ்வளவு முயற்சித்தாலும் உன்னுடைய முடியையோ, அடியையோ காணமுடியவில்லையே. அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளை உன்னடியார்களாகிய எங்களுக்காகக் காட்டி அருள் செய்கின்றாயே?

போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்=எங்கள் தலைவா, எங்கள் ஈசா, உன் திருவடிகளுக்குப் போற்றி. எங்களை ஆட்கொண்டு எங்களைக் கடைத்தேற்றும் திருவடிகளுக்குப் போற்றி. உன் பொன் போன்ற திருவடிகள் எம்மைக் காத்து அருளட்டும்.

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.= ஈசனே, நாங்கள் மார்கழிநீர் ஆடும் இந்தப் பொய்கையோ நீயும் உமை அன்னையும் சேர்ந்திருக்கும் சிவசக்தி ஐக்கியத்தை நினைவூட்டுகிறது. உன் அருளைப் பெற்று பக்தியாகிய சாகரத்தில் மூழ்கி நாங்கள் உய்யும் பொருட்டே இந்தக் குளத்தில் நீராடி உன்னைக் குறித்த துதிகளைப் பாடி ஆடுகிறோம். ஈசா, எம்மைக் காத்தருள்வாய்.


\நாளையில் இருந்து திருப்பள்ளி எழுச்சி.

Monday, January 3, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!

பெண்களைத் திருமணத்தில் தாரை வார்த்துக்கொடுக்கும்போது மணமகனைப் பார்த்துப் பெண்ணின் தந்தை கூறுவார்: உன் கையில் ஒப்படைக்கும் இந்தப் பெண்ணின் உடல், பொருள், ஆவி அனைத்தும் உன்னைச் சேர்ந்தது. இவளை நீ உன் கண்ணினும் மேலாகக் காத்துவரவேண்டும்." என்று வேண்டுவார். இப்படி ஒரு உறுதிமொழி இன்றளவும் திருமணங்களில் கொடுக்கப் படுகிறது.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று= உன்னிடம் கைப்பிடித்துக்கொடுத்திருக்கும் இந்தப்பெண்பிள்ளை உனக்கே அடைக்கலம் அப்பா, கவனம் எனப் பெண்ணின் தந்தை கூறுவது போல்

அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்= இப்போது எங்களுக்கு வந்திருக்கும் அச்சமே என்னவெனில், ஒருவேளை அப்படி எங்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டி எங்கள் தந்தையார்களால் பார்த்து நிச்சயிக்கும் மணமகன் சிவனைடியாராக இல்லாவிட்டால் என்ன செய்வது என் அப்பா, என் ஈசனே, ஆகவே எங்கள் வாழ்க்கையே பயனற்றுப் போகும் வண்ணம் அத்தகையதொரு மணமகன் எங்களுக்கு வேண்டாம் என்ற கோரிக்கையை நாங்கள் இப்போது புதுப்பிக்கின்றோம்.

ஈசா, எங்கள் பெருமானே, உனக்கொன்று சொல்லுகிறோம், விண்ணப்பம் வைக்கிறோம் உன்னிடம், தயவு செய்து உன் திருச்செவிகளால் அந்த விண்ணப்பத்தைக் கேட்டுப் பரிசீலித்து எங்கள் மனம் மகிழும் வண்ணம் நிறைவேற்றுவாய்.

எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க= எங்கள் ஈசனே, எங்களைத் திருமணம் செய்யும் அன்பர் சிவனடியாராக இல்லை எனில் எங்களால் முழுமனதோடு அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. அவர் எங்களை வலிய அணைத்தால் நாங்களும் எங்கள் மார்பகங்கள் அழுந்தும் வண்ணம் அவரை அணைக்க முடியாது. ஆகவே நின் அடியார்களாக இருப்பவர்களே அன்றி மற்றொருவர் எங்களைத் திருமணம் செய்யாமல் நீதான் அருள் புரியவேண்டும்.

மேலும் நாங்கள் செய்யும் சேவைகள், வழிபாடுகள், விரதங்கள் அனைத்தும் கணவரோடும் சேர்ந்து, அல்லது கணவர் இல்லாமல் பெண்டிர் மட்டும் நோற்கும் நோன்பு எதுவானாலும் அந்த வழிபாடுகள், விரதங்கள் அனைத்தும் உன் வழிபாட்டுக்கன்றி, உனக்காக நாங்கள் இருக்கும் விரதங்கள் அன்றி வேறொரு கடவுளுக்காக இருத்தல் வேண்டாம். எங்கள் கைகளால் பூத்தொடுத்தல், கோலமிடுதல், மற்றும் பலவேறு இறைப்பணிக்ள் செய்தல் எல்லாம் உனக்காகவே அன்றி மற்றக் கடவுளருக்காகச் செய்யாமல் இருக்கவேண்டும்.

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க= இரவிலும், பகலிலும் எங்கள் கண்கள் உன் திருவுருவைத் தவிர மற்ற வேறு எந்தப்பொருளையும் காணக் கூடாது. ஈசனின் நினைவிலேயே அழுந்தி அழுந்தி காணும் பொருளில் எல்லாம் ஈசனையே காண்கின்றனர் இந்த அடியார்கள். பரமனை அன்றி மற்றவர் எவரையும் தங்கள் தலைவனாக ஏற்க மாட்டார்கள்.

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!= இத்தகையதோர் அருமையான பரிசிலை நீ எங்களுக்குத் தந்தருளவேண்டும். எங்கள் கோவே, எங்கள் தலைவா, இதை மட்டும் நீ நாங்கள் கேட்டவண்ணம் அருளிச் செய்தால், இந்தச் சூரியன் உதித்தாலோ, அல்லது உதிக்காவிட்டாலும் கவலை இல்லை. கிழக்கே உதிக்காமல் மேற்கே உதித்தாலும் கவலைப் படமாட்டோம். எங்களுக்குத் தேவை உன் அருள் ஒன்றே. உன் கருணை ஒன்றே. ஈசனின் கருணா கடாக்ஷம் இருந்துவிட்டால் இவ்வுலக வாழ்க்கையே துச்சம் என்கின்றனர் இந்தப் பெண்கள்.

Sunday, January 2, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்= இறைவனின் திருவடித் தாமரைகளின் சிறப்பைச் சொல்லும் பாடல் இது. அண்ணாமலையில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடிகளில் மண்ணுலகத்தோர் மட்டுமில்லாமல் விண்ணுலகத்துத் தேவர்களும் வந்து தொழுது ஏத்துகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த அண்ணலின் திருவடித் தாமரைகளின் ஒளியின் முன்னே அந்த மன்னாதிமன்னர்களும், தேவாதி தேவர்களும் அணிந்திருக்கும் முடிகளில் உள்ள பல்வேறுவிதமான நவரத்தினமணிகளும் ஒளி இழந்து, சோபை இன்றிக் காணப்படுகிறது. அது போல

கண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்= இருண்ட வானில் ஒளி வீசிக்கொண்டிருந்த விண்மீன்கள், அருணன் உதித்து சூரியன் மேலெழும்பத் தொடங்கியதும், இருள் நீங்கி வெளிச்சம் பரவ, விண்மீன்களின் ஒளி மங்கி, மறைவதைப்போல


பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்= ஈசன் ஒரு சமயம் பெண்ணாகி நிற்கிறான். ஒரு சமயம் ஆணாக நிற்கின்றான். வேறொரு சமயம் பெண்ணுமில்லாமல், ஆணுமில்லாமல் அலியாக மாறி நிற்கின்றான். அதைப் போலவே ஒரு சமயம் இருண்ட வானமாய்க் காட்சிதந்தது ஒளி மிகுந்த வானமாயும், ஒரு சமயம் வறண்ட பூமியானது, பசுமை நிறைந்த பூமியாகவும், இவை எல்லாவற்றுக்கும் மேல் அனைத்துக்கும் வேறுபட்டு நிற்கும் பரம்பொருளாகவும் எல்லாவற்றிலும் நிலைத்து நின்றும்

கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். = இவை எல்லாவற்றையும் காட்டி, மறைத்து, அருளிச் செய்து இத்தனையும் செய்யும் பேரமுதமாய் நிற்கின்றான் எங்கள் ஈசன். அத்தகைய ஈசனைப் போற்றி அவன் புகழைப்பாட ஏ, பெண்ணே இந்தப் பூம்புனலில் பாய்ந்து ஆடிக் குளித்து வணங்கச் செல்லுவோம் வா.

Saturday, January 1, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்
கொங்குண் கருங்குழலில் நம்தாஆஅம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப்பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப்படி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

கொங்கண் கருங்குழலி நம் தம்மைக்கோதாட்டி= இங்கே குளத்திற்கு வந்து எல்லாரும் நீராட ஆரம்பிச்சும் ஒரு பெண்ணுக்கு நீராட மனசில்லை. குளிருகிறது. திரும்பிண்டு நிற்கிறாள் போலும். அவளையும் அழைத்து தாமரை மலர்கள் நிறைந்த இந்தப் புனலில் குதித்துக் குளிக்க ஆரம்பித்துவிடு, பின்னர் குளிரே தெரியாது என்பது தான் கருத்து. பக்தியாகிய கடலில் மூழ்கினால் நம் பாவங்கள் ஆகிய குளிர் நம்மை விட்டு விலகும்.

செங்கண் அவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்= செந்தாமரை போன்ற செவ்வரி ஓடிய கண்களைக்கொண்ட திருமாலாகட்டும், ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு முகமாய் நான்கு முகங்களை உடைய நான்முகனாகட்டும், மற்ற தேவாதிதேவர்களாகட்டும் இவர்கள் எவரிடமும் இல்லாத வாறு

எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்= உள்ள ஒப்பற்ற பேரின்பம் நம்மை நாடி, நம்மைத் தேடி வருமாறு

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்= இந்நிலவுலகில் இங்கே நம்முடைய ஒவ்வொருத்தர் வீடுகளிலும் எழுந்தருளி,
ஈசன் வீதியுலா வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பான வழிபாடு நடத்துவார்கள், அதையும் சொல்லலாம். ஒவ்வொருத்தர் மனக்கோயிலிலும் ஈசன் இருப்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். நாம் எவ்வளவு சிறியோர்களாக இருந்தாலும் நமக்காக நாம் உய்யும் பொருட்டு நம்மை ஆட்கொள்ள வேண்டி ஈசன் இறங்கி வருகிறான்.

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை= அவனுடைய செந்தாமரையைஇ ஒத்த பொற்பாதங்களின் நிழலை நமக்குத் தரும்படியாக நமக்கு நாம் ஏவிய ஏவலைச் செய்யும் சேவகனாக

அங்கண் அரசை அடியோங்கட்குஆரமுதை= அனைத்து உலகுக்கும், அரசனாக விளங்குபவனை. அவனைத் தொழுது ஏத்தும் சிவனடியார்களுக்குக் கிடைத்தற்கரிய பேரமுதாக விளங்குபவனை

நங்கள் பெருமானைப்பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனாகிய, எங்கள் தலைவனாகிய பெருமானைப் பாடித் தொழுது நமக்கு மட்டுமல்லாமல், இவ்வுலகத்தினர் அனைவருக்கும் நலமும், நன்மையும் திகழும் வண்ணம் அவனைத் தொழுவோம். அதற்கு முன் தாமரைப்பூக்கள் நிறைந்த இந்தப் பூங்குளத்தில் துளைத்து விளையாடிக் குளிக்கலாம்.

நம் மனதில் ஈசனை இறுத்தி பக்தியாகிய கடலில் மூழ்கித் துதித்தால் ஈசன் நம்மை ஆட்கொள்ளுவான்.