Saturday, November 28, 2009

என் பயணங்களில் - திருப்புட்குழி!

காஞ்சிபுரத்தை முடித்துக் கொண்டு அடுத்துத் திருப்புட்குழிக்குப் பயணம் ஆகவேண்டும். வரதராஜர் கோயில் சந்நிதித் தெரு பூராவும் துணிக்கடைகள். எங்க பேருந்து நின்ற இடத்திலும் ஒரு துணிக்கடை. மற்றவர்கள் வர நேரம் பிடிக்க, வழக்கம்போல் சீக்கிரமாய் வந்திருந்த நாங்க இரண்டு பேரும், பொழுது போகாமல் தவித்துக் கொண்டிருந்தோம். துணிக்கடை அப்போத் தான் திறந்து பணியாளர்கள் வந்துட்டு இருந்தாங்க. உள்ளே போய்ப் பார்க்கலாம் என்பது ரங்ஸின் விருப்பம். ஆனால் வாங்கறதா இருக்கணும், இல்லாட்டிப் போகக் கூடாது, அதுவும் காலங்கார்த்தாலே போய்ட்டு ஒண்ணும் வாங்காம வரது சரியில்லைனு என்னோட வாதம். கடைசியில் வழக்கம்போல் ரங்ஸ் தான் ஜெயிச்சார். ஹிஹிஹி, கடைக்குள்ளே போனோம். ஏதோ பத்து லக்ஷம் ரூபாய்க்குப் புடவை வாங்கப் போறோம்னு நினைப்பிலே கடைக்காரங்க ஏக உபசாரம். நான் அழுத்தம் திருத்தமாய் பருத்திப் புடவைகள்தான் வேண்டும் என்றும், வேறு புடவைகள் வேண்டாம் என்றும் முதலிலேயே சொல்லிட்டேன். குறைந்த பக்ஷம் 250ரூபாயிலிருந்து பருத்திப்புடவைகள் போட்டார்கள். கைத்தறி என்பது பார்த்ததுமே புரிந்தது. அம்பி வஸ்த்ரகலா புடைவையை என்ன கலரில் வாங்கறாரோனு ஒரே கவலை. இருந்தாலும் பரவாயில்லை அது பட்டு, இது காட்டன் தானேனு, க்ரே கலரில் ஒரு புடைவையை எடுத்துக் கொண்டேன். 350ரூ ஆச்சு. இன்னிக்கு இதை எழுதும்போதும் அந்தப் புடைவைதான் கட்டிக் கொண்டு எழுதறேன். அதிலேயே ப்ளவுஸ் இருக்குங்கறாங்க. ஆனால் ப்ளவுஸ் கட் பண்ணினால் புடைவை நீளம் போதாது. ரன்னிங்கிலே இருந்தால் கட் பண்ணாமல் கட்டுவதே சரியாய் இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் புடைவை யோகம் அடிச்சது. அதுக்குள்ளே மத்தவங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. வேலூர் போறோமே, அங்கே ஆரணி புடைவை பார்த்திருக்கலாமேனு ஒரு எண்ணம் வந்தது. சரி, அப்புறமாப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆரணிப் புடைவையும் நல்லா இருக்கும். புடைவை கட்ட ஆரம்பிச்ச நாளிலே முதல்லே கட்டிய பட்டுப்புடைவைகள் எல்லாமே ஆரணிதான். தகதகவென்று இருக்கும். இப்போ அந்தத் தரம் இருக்குமா தெரியலை. பார்க்கணும். அடுத்த தீபாவளிக்கு அம்பி அலையவேண்டாம் பாருங்க.

இப்போ பேருந்தில் எல்லாரும் ஏறியாச்சு. திருப்புட்குழியை நோக்கிப் பேருந்து போயிட்டு இருக்கு. அதன் தலபுராணத்தை சுற்றுலா நடத்துநர் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தார். திருப்புட்குழியை முடிச்சதும், அடுத்து வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஆலயம். ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸவாமிகள் நடத்தும் ஆலயம் அது. அங்கே போயிட்டு பின்னர் வேலூர் போய்ச் சாப்பாடு. அதன் பின்னர் ஸ்ரீபுரம். தி.வா. கவனிச்சுக்குங்க. இன்னும் இரண்டுபதிவுக்கு அப்புறம் தான் ஸ்ரீபுரம் வரும். பேருந்து திருப்புட்குழியை வந்தடைந்தது. திருப்புட்குழி நூற்றி எட்டு திவ்யதேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பட்ட கோயில். ஜடாயுவுக்கு ஸ்ரீராமர் தகனம் செய்து ஈமக்கிரியைகள் புரிந்த இடம் என்று சொல்கின்றது தலவரலாறு. பெருமாளின் பெயர் விஜயராகவப் பெருமாள். மரகதவல்லித் தாயார் அருள் பாலிக்கிறாள். மூலவரின் தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். உற்சவரின் திருவீதி புறப்பாடுகளில் ஜடாயுவுக்கும் சகலவிதமான மரியாதைகளும் செய்யப் படுகின்றன. ஜடாயுவிற்கு ஈமக்கிரியைகள் செய்த தலமாதலால், கொடிமரம் கோயிலின் உள்ளே கிடையாது. பலிபீடமும் கோயிலுக்கு வெளியே காணப்படுகிறது. தலவரலாறு நாளை காண்போமா?

Thursday, November 26, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! எங்கே எல்லாம் ஒளிஞ்சிருக்கே!


ஆற்காடு யுத்தம் நடக்கும்போது ராபர்ட் கிளைவிற்கு உடலநலமில்லாமல் போக, இந்தக் கோயிலின் துளசிதீர்த்தம் பருகக் கொடுத்தனராம். நோய் தீர, நன்றிக்கடனாக ராபர்ட் கிளைவ், தான் போரில் வெற்றி வீரனாய்த் திரும்பும்போடு வரதார்ஜருக்கு விலை உயர்ந்த மகரகண்டியைக் கழுத்தில் அணிவிக்க அன்பளிப்பாய் அளித்தாராம். மேலும் பிரம்மோற்ச்வத்தின்போது காஞ்சிக்கு வந்து பெருமாளையும் தரிசிக்கும் வழக்கமும் கிளைவிற்கு இருந்திருக்கிறது. ஒருமுறை அத்தகைய பிரம்மோற்சவத்தின்போது பெருமாளின் அழகில் மயங்கிய கிளைவ் தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்குக் கொடுத்துவிட்டாராம். இன்றளவும் அந்தச் சங்கிலியை கருடசேவையின்போது சார்த்துவது வழக்கம் என்கின்றனர். கிளைவ் தவிர ஆங்கிலேய அதிகாரியான ப்ளேஸ்துரை என்பவரும் ஸ்ரீவரதருக்குத் தலையில் அணியும் ஆபரணத்தை அன்பளிப்பாய்த் தந்து மகிழ்ந்தாராம். ஸ்ரீவரதராஜர் கோயில் என்று சொன்னாலும் மூலவர் பெயர் தேவராஜப் பெருமாள். உற்சவருக்கே வரதராஜர் என்ற திருநாமம். உற்சவருக்கு இருக்கும் இரு தேவியருமே பூமாதேவியர் என்றும் சொல்கின்றனர். இதன் காரணமாய்ச் சொல்லப் படுவது, முகமதியர் படை எடுப்பின்போது விக்கிரஹங்களை மறைக்கவேண்டி, உடையார்பாளையம் ஜமீனுக்கு விக்கிரஹங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. பின்னர் அங்கிருந்து மீண்டும் வரும்போது விக்கிரங்கங்கள் மாறிவிட்டதாயும், இரு தேவியருமே பூமிப் பிராட்டியாக அமைந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். மேலும் உடையார்பாளையம் ஜமீனில் காஞ்சி வரதர் தவிர ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் அங்கே அடைக்கலம் புகுந்ததால், திரும்ப எடுத்து வரும்போது அடையாளம் காணமுடியாமல், சலவைத் தொழிலாளி ஒருவர் காஞ்சி வரதரின் ஆடையின் மணத்தை வைத்துக் கண்டு பிடித்ததாயும் கூறுவார்கள். இதன் காரணமாக சலவைத் தொழிலாளி வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவராத்திரியில் மரியாதைகள் செய்யப் பட்டு வருகின்றன.

உற்சவரின் திருமுகத்தில் காணப்படும் வடுக்கள் பிரம்மாவின் யாகத்தின் வெப்பம் தாங்காமல் ஏற்பட்டவை என்கின்றனர். இங்கே இருக்கும் வையமாளிகை என்னும் இடத்தில் உள்ள இரு பல்லிகளின் தரிசனம் மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுவது. ஸ்ருங்கிபேரர் என்னும் முனிவரின் குமாரர்கள் ஹேமன், சுக்லன் இருவரும் கெளதம முனிவரின் சீடர்கள். குருகுலத்தில் இருந்த இவர்கள் குருவுக்கெனக் கொண்டு வரும் தீர்த்தத்தில் சுத்தமில்லாமையால் இரு பல்லிகள் துள்ளிக்குதித்து வெளியே வர, சீடர்களின் கவனக்குறைவைக் கண்ட குருவானவர் இருவரையும் பல்லிகளாய்ப்பிறக்கும்படி சாபம் கொடுக்கிறார். சாபவிமோசனம் வேண்டிய இருவரையும் சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் ஸ்ரீவரதராஜரை வழிபட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்க, இங்கே வந்து தவம் செய்த இருவருக்கும், யானை ரூபத்தில் வழிபட்டு வந்த இந்திரனுக்கும் ஒரே சமயம்சாபவிமோசனம் கிடைக்கிறது. இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கப் பல்லி ஒன்றும், வெள்ளிப் பல்லி ஒன்றும் செய்து இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும் இந்தப் பல்லிகளைத் தொட்டுப் பிரார்த்திப்போருக்கு சகல தோஷங்களும் விலகும் என்றும் சொல்கின்றனர்.

இங்கு பாஞ்சராத்திரமுறைப்படி மந்த்ராஸநம் என்னும் திருப்பள்ளி எழச் செய்தல், ஸ்நாநாஸநம் என்னும் திருமஞ்சனம் அல்லது அபிஷேஹம், அலங்காரஸநம் என்னும் ஆடை, ஆபரணங்கள் அணிவித்து மலர்மாலைகள் சூட்டல், போஜ்யாஸநம் என்னும் உணவு படைத்தல், புநர் மந்த்ராஸநம் என்னும் துளசியால் அர்ச்சனையும் பர்யாங்காஸநம் என்னும் பள்ளியறை வழிபாடு போன்றவை நடைபெறுகின்றன. வருடத்தின் பனிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் உண்டு. மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்குவது போல் இங்கே ஸ்ரீவரதராஜர் பாலாற்றில் இறங்குகிறார். இதற்குக் காரணமாய்ச் சொல்லப் படுவது:

மொகலாயர் படை எடுப்பின்போது வரதராஜர் காஞ்சிக்கு அருகே பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு என்னும் ஊரில் லக்ஷ்மிநரசிம்மர் கோயிலில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். ஒரு வருஷத்துக்குக் காஞ்சி வரதருக்கு அந்தக் கோயிலிலேயே திருமஞ்சனம் மற்றும் அனைத்து உற்சவங்களும் நடைபெற்று வந்துள்ளது. இதன் அடையாளமாகவே ஒவ்வொரு சித்ரா பெளர்ணமிக்கும் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி லக்ஷ்மி நரசிம்மரை வலம் வந்து நன்றி தெரிவித்துச் செல்வதாய் ஐதீகம். இதே போல் வைகாசிமாசம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் சோளிங்கபுரத்தில் வசித்த ஒரு பக்தனுக்காக பெருமாள் அங்கே சேவை சாதிப்பதாக ஐதீகம் ஒன்று உண்டு. அதற்காக மூன்றாம் நாள் உற்சவத்தின் போது அதிகாலை சூரியோதயத்தில் கருடவாகனத்தில் இரட்டைக்குடைகளோடு எழுந்தருளும் பெருமாளை சில நிமிட நேரம் அந்தக் குடைகளால் மறைக்கின்றனர். அந்த மறைக்கும் சில நிமிடங்கள் பெருமாள் சோளிங்கபுரத்தில் வசித்து வந்த தோட்டாச்சார் என்பவருக்காக அங்கே தரிசனம் கொடுப்பதாய் ஐதீகம். வருடா வருடம் கருடசேவைக்குக் காஞ்சி வந்த தோட்டாசாரியாருக்கு ஒரு வருஷம் வரமுடியாமல் போக மனம் வருந்தி பகவான் நினைவாகவே தவித்துக் கொண்டு இருக்க, பகவான் அவருக்கு அங்கேயே தன் தரிசனத்தைக் காட்டி அருளினார். அதன் நினைவாய் இது இன்றளவும் நடந்து வருவதாய்ச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜருக்கு யக்ஞமூர்த்தி என்பவ்ருடன் நடந்த வாதத்தில் வெல்ல உதவியதும் இங்கேதான். கூரத்தாழ்வார் இழந்த தன் கண்களைத் திரும்பப் பெற்றதும் இங்கேதான். ஸ்ரீவரதாராஜஸ்தவம் என்னும் பாடல்களைப் பாடிப் பெற்றார் என்பார்கள். திருக்கச்சிநம்பிகள் ஸ்ரீவரதராஜருக்கு விசிறி கைங்கரியம் செய்து பெருமாளுடன் நேரடியாகப் பேசி அவர் கட்டளைகளை ஸ்ரீராமாநுஜருக்குத் தெரிவித்து வந்தாய்ச் சொல்லுகின்றனர். கவி காளமேகமும் கஞ்சி வரதரின் கருடசேவையைப் பார்த்துவிட்டு நிந்தாஸ்துதியாக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.

அடுத்ததாய் திருப்புட்குழி என்னும் தலம்.

Sunday, November 22, 2009

வஸ்த்ரகலா வந்தாச்சு! ராமலக்ஷ்மிக்கு நன்றி!

கஞ்சி வரதப்பரைப் பத்தி எழுதும்போது இது என்ன மொக்கைனு கேட்காதீங்க. போன வாரம் அம்பி திடீர்னு தொலைபேசியில் அழைத்தப்போ எனக்கும் என்னடானு ஆச்சரியமா இருந்தது. கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்துதான்) ராமலக்ஷ்மியோட வேலை அது. வல்லி சிம்ஹனோட பதிவிலே நான் அவங்களைச் சமாதானப்படுத்த அம்பி வாங்கித் தரப் போற வஸ்த்ரகலாவைப் பத்திச் சொன்னேனா? அதை அம்பி பார்க்கவே இல்லையா? ராமலக்ஷ்மி வேலை மெனக்கெட்டு(ஹிஹிஹி, வீட்டிலே சமையல் ரங்ஸாம், சொன்னாங்க:P) அதை எல்லாம் ஜி3 பண்ணி(ஜி3 நான் உங்களை நினைக்கவே இல்லை, ரொம்ப நாளாச்சேனு பீலிங்ஸா இருந்துச்சு இல்லை, இப்போ சரியா) அம்பிக்கு அனுப்பி இதை எல்லாம் கண்டுக்கறதே இல்லையானு கேட்டிருக்காங்க. அதான் அம்பி தொலைபேசியில் அழைச்சிருக்கார். அதுவும் சொந்தத் தொலைபேசியா? எங்கே?? அம்பியாவது? சொந்தத் தொலைபேசியில் பேசறதாவது? எல்லாம் மாமனார் வீட்டுத் தொலைபேசிதான்.

அப்புறமா ஒருவழியா அம்பியை வஸ்த்ரகலா வாங்கித் தர ஒத்துக்க வச்சுட்டேன். எனக்கும், வல்லிக்கும் முதல்லே வந்துடும். அப்புறமா மத்தவங்களுக்கு. நாங்க ரெண்டு பேரும்தான் அம்பியோட பதிவை எத்தனை மொக்கையாய் இருந்தாலும் ஆதரிச்சு இத்தனை பிரபலமா ஆக்கி இருக்கோமே. அதுக்கான நன்றி அறிவிப்புத் தான் இந்த வஸ்த்ரகலா. அம்பி நான் கேட்ட நீலம் அல்லது க்ரே கலர் எனக்கு. வல்லி என்ன கலர் கேட்டாங்க தெரியலை. பச்சையோ மஞ்சளோ எனக்கு வேண்டாம். அதையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு!

Friday, November 20, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!

மன்னனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. தன் தவறை உணர்ந்து கொண்டான். உடனேயே ஒரு சிறு படையைத் திரட்டிக் கொண்டு காஞ்சியை விட்டுச் சென்ற திருமழிசை ஆழ்வாரையும், கணிகண்ணனையும் தேடிக் கொண்டு சென்றான். அருகில் இருந்த ஓர் சிறிய கிராமத்தில் தங்கி இருந்த இருவரையும் கண்டான். மனமார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இருவரையும் காஞ்சிக்குத் திரும்பச் சொன்னான். மன்னனின் மன்னிப்பு மனதார இருப்பதை உணர்ந்துகொண்ட ஆழ்வாரும் காஞ்சிக்குத் திரும்ப முடிவு செய்தார். அவர் மட்டும் திரும்பினால் போதுமா? கூடவே கணிகண்ணனும், எல்லாத்துக்கும் மேலே பெருமாளும் அல்லவோ திரும்பணும்? அதுக்கும் ஆழ்வார்தான் மனசு வைக்கணும். ஆழ்வார் உடனேயே பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
என்று வேண்டிக் கொள்ள பெருமாளும் ஆழ்வாரின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து காஞ்சிக்குத் திரும்பினாராம். அன்று முதல் இவருக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இதே கதையில் கணிகண்ணனை மன்னன் பாடச் சொன்னான் என்பதற்குப் பதிலாக வேறு மாதிரியும் சொல்கின்றார்கள்.

திருமழிசை ஆழ்வாருக்கும், கணிகண்ணனுக்கும் சேவைகள் செய்து வந்த மூதாட்டியின் அன்பிலும், அவள் குணத்திலும் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போன திருமழிசை ஆழ்வார் அந்த மூதாட்டி இளமையில் சிறப்போடும், செல்வத்தோடும் வாழமுடியவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். அவருடைய பக்தியின், தவத்தின் உதவியால் பெருமாளை வேண்டி அந்த மூதாட்டிக்கு இளமை திரும்பக் கிடைக்கச் செய்கிறார். இந்தத் தகவல் மன்னனின் அரண்மனை வரையிலும் எட்ட, தானும், தன் ஆசைக்கிழத்தியும் வயது முதிர்ந்து வருவதை எண்ணிய மன்னன், நமக்கும் இளமை திரும்பினால் இன்னமும் பலநாட்கள் ஆநந்தம் அநுபவிக்கலாமே என எண்ணினான். திருமழிசை ஆழ்வாரை இதற்காக வேண்ட, ஆழ்வார் மறுக்கிறார். மூதாட்டியின் இறை பக்தியையும், மன்னனின் சுயநலத்தையும் சுட்டிக் காட்டிய அவர் திட்டவட்டமாய் மன்னன் கோரிக்கைக்கு மறுக்கிறார். மன்னன் விடாமல் கணிகண்ணனைக் கேட்க தன் குரு மறுத்த ஒரு விஷயத்திற்குத் தான் எங்கனம் உதவுவது என அவனும் மறுக்கிறான். கோபம் கொண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்த அன்பு சீடனைப் பிரிய மனமில்லாமலும், பெருமாளையும் பிரிய மனமில்லாமலும் இருவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார் திருமழிசை ஆழ்வார். பின்னர் மன்னன் வேண்டுகோளின்படி திரும்புகிறார். இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் இந்தப் பெருமான் பேரில் அடைக்கலப் பத்து என்ற பாசுரங்களைப் பாடி உள்ளார். இந்தப் பாசுரங்கள் வெள்ளிப்பதக்கங்களில் பொறிக்கப் பட்டு ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர். அடைக்கலப் பத்து தவிர, அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச்சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார் ஸ்ரீதேசிகர். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் கூட இந்தப் பெருமாளின் பெயரில் ஒரு கீர்த்தனை பாடியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பெருமாள் தங்கக் கொண்டையுடன் காட்சி அளிப்பார். இந்தத் தங்கக் கொண்டையை இவருக்கு அளித்தது வெங்கடாத்ரி என்னும் தெலுங்கு அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வைணவர் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தின் பெருமாளுக்கு ஆப்ரணங்கள் வழங்கி உள்ளதாய்த் தெரிய வருகிறது. ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் தங்கக் கொண்டை செய்யவேண்டி, போதிய பணம் பெற யாசகம் செய்து பொருள் சேர்த்தார் வெங்கடாத்திரி. நகை செய்யும் ஆசாரியிடம் பொருளைக் கொடுத்துப் பொன் வாங்கி கொண்டை செய்யச் சொல்ல, அதில் நட்ட நடுவில் பதிக்கவேண்டிய எமரால்ட் கற்களைப் பார்த்த ஆசாரியின் ஆசை மனைவியான நடன நங்கை அதைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டாள். இந்த் அவிஷயம் அறிந்த வெங்கடாத்ரி அந்த மாது எங்கே இருக்கிறாள் எனக் கேட்டறிந்து அவள் வசித்து வந்த தஞ்சைக்கே சென்று அங்கே அவள் வீட்டு வாயிலில் உண்ணாவிரதம் இருந்து அந்தக் கற்களை மீட்டு வந்தார். பின்னர் பெருமாள் அவர் கனவில் வந்து ஸ்ரீதேவி, பூதேவிக்கு அவ்வாறே செய்து கொடுக்கும்படிச் சொல்ல அவ்வாறே இரு நாச்சிமார்களுக்கும் இதே போல் யாசகம் செய்து பொருளீட்டி ஆபரணங்கள் செய்து கொடுத்திருக்கிறார் வெங்கடாத்ரி.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களில் சிலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிக்குப் பண உதவி, ஆபரணங்கள் என நன்கொடையாகக் கொடுத்திருக்கின்றனர்.

Thursday, November 19, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! எங்கே போனாயோ?

பெருந்தேவித் தாயாரின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. விமானத்தின் பெயர் கல்யாணகோடி விமானம். இந்தக் கோயிலில் முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைச் சேவிக்கவேண்டுமாம். ஆனால் நாங்க முதல்லே பெருமாளைத் தான் பார்த்தோம். அப்புறமாய்த் தாயாரைப் பார்த்தோம். எழுதறது மட்டும் முதல்லே தாயார் பத்தி. கிழக்கு நோக்கி தாமரை மலர்களைக் கையில் ஏந்தியவண்ணம் அபயஹஸ்தம் காட்டும் தாயாருக்கு அரித்ரா தேவி, மகாதேவி என்ற திருநாமங்களும் உண்டு என்றார் பட்டாசாரியார். அருகில் உற்சவர். இந்தட் தாயாரின் அவதாரம் பற்றிய பட்டாசாரியார் சொன்ன புராணக் கதையானது.

பிருகு மகரிஷி பிள்ளை வரம் வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய யாகத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் அவதரித்தார் என்கின்றனர். அவர் பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரைப் பூஜித்து வழிபட்டு வர, அவருக்கு அருள் புரிய எண்ணிய பெருமான், சிவன், பிரம்மா, பிருகுமஹரிஷி, காசியபர், கண்வர், காத்யாயன ரிஷி, ஹரித ரிஷி போன்றோர் முன்னிலையில் அம்பாளின் கரம் பிடித்து மணம் புரிந்து கொண்டார். அப்போது உள்ளே சென்ற அம்பாள் இன்று வரை படிதாண்டுவதில்லை. படிதாண்டாப் பத்தினி எனப் படும் அம்பாள் பிரம்மோற்சவத்தின் போது எழுந்தருளும் பெருமாளுடன் கூட திருவீதி உலாவுக்குச் செல்வதில்லை. ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்ரீவேதாந்த தேசிகருக்காகப் பொன்மழை பொழியச் செய்தாள் பெருந்தேவித் தாயார். வேதாந்த தேசிகரின் மீது பொறாமை கொண்ட சிலர் அவரை எவ்விதமாவது அவமானப் படுத்த எண்ணினார்கள். காஞ்சிக்கு வந்த வறிய பிரம்மசாரி ஒருவனை வேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும் எனக் கேட்கும்படி ஏவினார்கள். அவனும் அவ்விதமே அவரிடம் சென்று பொருள் கேட்க, தேசிகரோ அம்பாளை வேண்டினார். ஸ்ரீதுதி பாடினார். அவரின் ஸ்ரீதுதிகளால் மனமகிழ்ந்த அம்பாள் அங்கே பொன்மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை நிலைநாட்டினாள்.

அது மட்டுமா? ஸ்வாமிக்குனு தயார் செய்யப் பட்ட வெள்ளித் தகடுகள் வேய்ந்த கதவுகளையும் தனக்கென வாங்கிக் கொண்டுவிட்டாள். பின்னர் வேறு வெள்ளித் தகடுகள் வேய்ந்த புதுக்கதவுகள் செய்து பெருமாளுக்குக் கதவுகள் பொருத்தப் பட்டது என்கின்றனர். தாயார் சந்நிதியில் இருந்து உள்பிரஹாரத்துக்கு வந்தால் அங்கே நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் போன்றோர் காணப்படுகிறார்கள். இங்கே விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே காணப்படுகிறார். இங்கிருந்து இப்போ நாம் ஏறப் போவது அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு.

இருபத்து நான்கு படிகள் என்கின்றனர். காயத்ரி மந்திரத்தின் இருபத்து நான்கு தத்துவங்களையும் குறிக்கும் வண்ணம் எழுப்பப் பட்டது என்று சிலர் கூற்று. விமானம் புண்ணியகோடி விமானம். மூலவர் தேவராஜர். இவருக்கு தேவப் பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், தேவாதிராஜன். கஜேந்திர வரதன், தேவராஜப் பெருமாள், மாணிக்கவரதன் போன்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. திருப்பதியின் வெங்கடாசலபதியைக் கிருஷ்ணரின் அம்சம் என்றும் வகுளா தேவிதான் யசோதை என்றும் சொல்வார்கள். ஸ்ரீரங்கநாதரோ ஸ்ரீராமரின் அம்சம் ஆவார். இங்கே கஞ்சி வரதரோ எனில் ராமர், கிருஷ்ணர் இருவரின் அம்சங்களையும் கொண்டு ராமகிருஷ்ண அம்சத்தோடு விளங்குகிறார். ஒவ்வொரு வருஷமும் சித்ரா பெளர்ணமி அன்று பிரம்மா இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். சித்ரா பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பதினான்கு நாட்களும் மாலைக்கதிரவனின் கிரணங்கள் மூலவரின் பாதங்களைத் தொட்டுச் செல்லும். இவர் சொன்னால் சொன்னபடி செய்யும் பெருமாள் ஆவார்.


எப்படினு கேட்கறீங்களா? திருமழிசை ஆழ்வார் இந்த நகரில் தன் சீடனான கணிகண்ணன் என்பவருடன் வசித்து வந்தார். பல்லவ மன்னர்கள் காஞ்சியை ஆட்சி புரிந்த காலம் அது. கணிகண்ணனின் தமிழ்ப் பாடல்களின் அழகைப் பார்த்து ரசித்த மன்னர், இந்தப் பாடல்கள் தன்னைப் பற்றிப் போற்றிப் பாடினால் இன்னும் நன்றாய் இருக்கும் என எண்ண ஆரம்பித்தார். கணிகண்ணனைத் தன் அவைக்கு வரவழைத்துத் தன்னைப் போற்றிப் பாடச் சொன்னார். ‘மாதவனைப் பாடும் வாயால், மனிதர்களைப்பாட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக மறுத்தார் கணிகண்ணன். மன்னன் அவரைப் பல்லவ நாட்டை விட்டே வெளியே போகச் சொல்லி நாடு கடத்தினான். கணிகண்ணனும் காஞ்சியை விட்டும் பல்லவநாட்டை விட்டும் வெளியேறினார். தன் அருமைச் சீடன் நகரை விட்டுச் செல்வது அறிந்த திருமழிசை ஆழ்வார் துக்கம் பொங்கப் பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்கவேண்டா! துணிவுடைய
செந்நாப் புலவன் யானும் போகின்றேன் நீயுமுன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!”

என்று சொல்லிவிட்டார். திருமழிசை ஆழ்வாரும் காஞ்சியை விட்டுக் கிளம்ப பெருமாளும் ஆழ்வார் கேட்டுக்கொண்டபடிக்கு தன் பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஆழ்வாரைத் தொடர்ந்து போய்விட்டார். காஞ்சியை இருள் சூழ்ந்து கொண்டது. மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் இல்லை. மன்னன் நடுங்கிப் போனான். ஏற்கெனவே நகரம் இருளில் ஆழ்ந்திருந்தது. இப்போ இங்கே பெருமாளையே காணோம். எங்கே போனார்? அது தனியாக வேறே ஊர். என்றாலும் இங்கே திரும்பி வந்தாரானு மட்டும் நாம இப்போ தெரிஞ்சுக்கலாமா? நாளைக்கு கணினி ஆக்கிரமிப்போ, ஆற்காட்டார் வரவோ இல்லைனா வருவேன்.

Wednesday, November 11, 2009

கடும் ஆக்கிரமிப்பு!

கடந்த பத்து நாட்களாக என்னோட கணினி கடுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது எந்த நாட்டுச் சதி என ஆராய்ந்ததில் யு.எஸ்ஸில் இருந்து வந்திருக்கும் சிலரின் ஆக்கிரமிப்பு எனத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போய்விட்டது. இதுக்காக டாடா கம்யூனிகேஷன்ஸ்காரங்க இணையத்தை இணைப்புக் கொடுக்காமல் செர்வரை டவுன், டவுன் என்றே ஒரு மூணு நாள் ஓட்டினாங்க. அப்புறமா வேறே வழியில்லாம நேத்திக்கு இணைப்பைக் கொடுத்துட்டாங்க. ஆனால் நமக்கு கணினியே கிடைக்கலையே! ஆண்டவா, இந்த சோகக்கதையை யார் கிட்டே போய்ச்சொல்றது?? நாளைக்குக் கணினி கிடைச்சாத் தான் கஞ்சி வரதப்பர் வருவார். மெதுவா வரேன், அது வரையில் எஞ்சாய் பண்ணுங்க எல்லாரும். சிஷ்யகே(கோ)டிங்க எல்லாம் கொஞ்சம் பொறுத்துக்குங்கப்பா!

Monday, November 2, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!


மலையாக மாறிய கஜேந்திரனின் மேல் பெருமாள் எழுந்தருளி இருப்பதால் மேலே பல படிகள் ஏறிச் சென்றே பெருமாளைத் தரிசிக்கவேண்டும். ஒரு வகையில் இதுவும் ஒரு மாடக்கோயில் என்றே சொல்லலாம். இந்தக் கோயிலுக்கு தேவகுரு பிரஹஸ்பதியும் வந்து வழிபட்டிருக்கிறார். இந்திரன் கொடுத்த சாபத்தால் ஏழ்மை நிலையடைந்த பிரஹஸ்பதிக்கு இங்கேதான் சாப விமோசனம் கிடைத்தது என்கின்றனர். ஐந்து பிராஹாரங்களுடன் இருக்கும் இந்தக்கோயில் கட்டுமலை அமைப்புடன் கூடியது. கட்டுமலைகளை முறையே வாரணகிரி அத்திகிரி எனச் சொல்லுகின்றனர். முதலில் மேலே ஏறுவது வாரணகிரியில். அங்கே அழகிய சிங்கரைத் தரிசனம் செய்து கொண்டே பின்னர் அத்திகிரிக்கு இன்னும் மேலே ஏற வேண்டும். மேலே ஏறினால் தேவராஜப் பெருமாள் என்ற பெயரில் மூலவர் எழுந்தருளி உள்ளார். ஆனால் இங்கே உற்சவர் ஆன வரதராஜருக்கே சிறப்பு அதிகம். அதோடு இந்தக் கோயிலில் தாயாருக்குச் சிறப்பும், செல்வாக்கும் அதிகம் என்கின்றனர். ஆகையால் முதலில் பெருந்தேவித் தாயாரைத் தரிசிக்கவேண்டும். அதுக்கு முன்னால் அத்தி வரதர் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தின் அத்தி வரதர் மிகவும் பிரபலமானவர். அவரை நாம் தினமும் தரிசிக்க முடியாது. அவர் இருப்பதும் வெளியே ஏதோ சந்நிதியில் இல்லை. கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே உள்ள அநந்த சரஸ் என்னும் தீர்த்தத்தில் உள்ள நீராழிமண்டபத்தின் அடியில் நீருக்குள்ளே நிரந்தரமாய் சயனக் கோலத்தில்வெள்ளிப் பேழையில் இருப்பவர் அத்தி வரதர். பெரிய அத்திமரத்தால் செய்யப் பட்ட இவர் யாகத் தீயில் இருந்து தோன்றியதால் உடல் வெப்பத்தால் தகிப்பதாகவும், தினமும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங்களில் திருமஞ்சனம் செய்யவேண்டும் என்று பட்டாசாரியார் ஒருவரது கனவில் வந்து சொன்னதாகவும், தினமும் திருமஞ்சனம் மூன்று வேளை செய்ய முடியாவிட்டால், தன்னை நிரந்தரமாய் அநந்த சரஸில் மூழ்க வைக்கும்படியும் பெருமாள் சொன்னதாகவும், நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் எடுத்துத் தினமும் மூன்று வேளை திருமஞ்சனம் செய்ய முடியாது என்பதால் வரதரை நீரில் மூழ்கும்படிச் செய்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. மற்றோர் தகவலின் படி கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் வசம் இந்தக் கோயில் போய்விட, இங்கே இருந்த மூல விக்ரஹங்கள் பாடலிபுத்திரம் அனுப்பப்பட்டன/கடத்தப் பட்டன. நரசிம்மர், ஹரித்ராதேவி தாயார், வரதர் போன்ற அனைவரும் பாடலிபுத்திரம் போய்விட, சில நாட்கள் கோயில் வழிபாட்டிலேயே இல்லை எனச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் கோயிலில் ஏற்கெனவே வழிபாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில், உற்சவர் இல்லையே என கோயிலின் பட்டர் ஒருவரும் ராமாநுஜரும் கூடி யோசித்து அத்திமரத்தால் வரதராஜரின் சிலா உருவை உருவாக்கியதாகவும், அந்நியர் கண்களில் இருந்து தப்பவேண்டி அநந்த சரஸில் வைத்திருக்கலாமெனவும் சொல்கின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு வெள்ளிப்பேழையில் வைக்கப் பட்ட அத்திவரதர் நீருக்குள் போய் மறைந்தார். இனி மூலவரும் இல்லை, உற்சவரும் இல்லையே என்ன செய்வது? என யோசித்த அர்ச்சகர்களுக்கு பெருமாளே மீண்டும் கனவில் வந்து பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே இன்னொரு வரதர் இருப்பதாகச் சொல்லி அவரைக் கண்டு பிடித்துப் பிரதிஷ்டை செய்யச் சொல்லி இருக்கின்றனர். அவரைக் கண்டுபிடித்து இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து எழுந்தருளப் பண்ணி இருக்கின்றனர். அத்தி வரதரை பெருமாளின் ஆக்ஞைப்படியே நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை நீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு மண்டலம் ஆராதனைகள் செய்து பின்னர் மீண்டும் நீருக்குள்ளேயே விடுவார்கள்.

கடைசியாய் 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வெளியே வந்திருக்கார். (அட, நாங்க செகந்தராபாத்தில் இல்லை இருந்திருக்கோம்?) மீண்டும் 2019- வருவாராம். ஹிஹிஹி, இருக்கோமோ, இல்லையோ? யாருக்குக் கொடுத்து வைக்கிறதோ தெரியலை, போகட்டும்! ஜெயஸ்ரீ கேட்ட சக்கரத்தாழ்வார் என்ற சுதர்சனர் இங்கே தான் குளக்கரையில் சேவை சாதிக்கிறார். மிகப் பெரிய சக்கரத்தாழ்வார் என்று சொல்கின்றார்கள். அநந்த சரஸ் தீர்த்தம் தவிரவும் வேகவதி ஆற்றையும் சேர்த்து மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. வேணுகோபாலன், பூவராகன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தை நம்மாழ்வார் பெயரில் ஆழ்வார் வீதி என அழைக்கின்றனர். பெருமாள் கருடசேவையின் போது இந்த ஆழ்வார் வீதிக்குத் தான் முதலில் வருகின்றார். மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இன்னும் பல அடியார்கள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரையும் தரிசித்தாலும் எல்லாவற்றையும் விட முக்கியமானது இங்கே உள்ள அம்மாள் காலட்சேபக் கூடம். வேதாந்த தேசிகரின் குருவான நடாத்தூர் வரதாசாரியார் என்பவர் தினமும் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார்.
அவர் செய்யும் நைவேத்தியங்களில் பாலும் இடம் பெறும். சூடாகக் காய்ச்சப்பட்ட பாலைச் சூடு போக நன்கு ஆற்றி, ஆற்றி இளஞ்சூடாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்வாராம்.. ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி சூடு பொறுக்காது எனக் கவனமாகச் செயல் படுவாளோ அதைப்போல் கவனமாகவும், பொறுமையாகவும் தினமும் இதைச் செய்து வந்ததால் பெருமாளே இவரை, “அம்மையே” என அழைத்ததாகவும், அது முதல் இவர் பெயர் நடாத்தூர் அம்மாள் என அழைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர்.

நாலாம் பிரஹாரத்தில் மடைப்பள்ளி. அங்கிருந்து பெருந்தேவி தாயார் சந்நிதிக்குப் போகும் வழியில் மீண்டும் பிரசாத விநியோகம் நடந்தது. இதுவும் பெருமாளுக்குப் படைக்கப்பட்டு மடைப்பள்ளியில் இருந்து வந்ததே. ஆனால் வெளியில் வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் கேட்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் தலைக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு, அவர் கேட்கலை, நாங்களாகவே தீர்மானம் பண்ணிக் கொடுத்தோம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டோம். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை விநியோகிக்கப் பட்டது. எந்தப் பெருமாள் கோயிலுக்கு எப்போது சென்றாலும் பிரசாதம் கிடைக்காமலோ அல்லது சாப்பிடாமலோ வரவே முடியாது. காக்கும் கடவுள் என்பதாலோ என்னமோ பெருமாள் கோயில்களுக்குப் போனால் வயிற்றைக் கவனிச்சுட்டுத் தான் அனுப்பறார் பெருமாள். இனி பெருந்தேவித் தாயாரின் சந்நிதி. அவள் கதை தனிக்கதை./. நாளைக்குப் பார்க்கலாமா? ஏற்கெனவே திவா வந்து ஸ்ரீபுரம் கூட்டிண்டு போகலையேனு கேட்டுண்டு இருக்கார். நிஜமாவே காஞ்சியைப் பத்தி ஓரளவு சுருக்கமாத் தான் எழுதறேன். ஹிஹிஹி, விரிவா எழுத ஆரம்பிச்சால் சிதம்பர ரகசியத்தை விடப் பெரிசாய் வரும்.

ஒண்ட வந்த பிடாரியா, ஊர்ப்பிடாரியா??

ரிமோட்டைக் குடு,

மாட்டேன், எனக்கு விஸ்வரூபம் சீரியல் பார்க்கணும்.

அது ஒம்போது மணிக்குத் தானே, இப்போக் கொடு,

இப்போ ஆரம்பிச்சுடும், ராஜ் டிவியிலே சீக்கிரம் ஆரம்பிக்கும்.

க்ர்ர்ர்ர்ர்ர் கொடுன்னா, நான் இந்த சீரியல் பார்த்துட்டு இருக்கேனில்லை?

பாருங்க, யார் வேண்டாம்னது?? நீங்கதானே இப்போ விளம்பர இடைவேளைனு சானல் மாத்தினீங்க? அது மட்டும் பரவாயில்லையா?

விளம்பர இடைவேளைம்போது இந்த சானலில் வர சீரியல் பார்ப்பேன்.

எத்தனை சீரியல் பார்ப்பீங்க?

ஏன்? உனக்கு ஒண்ணும் கம்ப்யூட்டரில் வேலை இல்லை? யாரும் மாட்டிக்கலையா சாட்டிங்குக்கு?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன், நான் இருந்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கோ?

நீ போய் உன்னோட எழுத்து வேலை ஏதும் இருந்தாப் பாரு, அது சரி, ராஜகோபாலன் போன் பண்ணினார் போலிருக்கே? அவருக்கு அனுப்ப மறந்துட்டியா?

அவர் ஒண்ணும் அதுக்கு போன் பண்ணலை. வேறே சந்தேகம் கேட்டுட்டு இருந்தார், அதான் நீங்க தான் கேட்டுண்டு இருந்தீங்களே?

எங்கே? நீ பேசிண்டிருந்ததிலே சீரியல்லே என்ன பேசிண்டாங்கங்கறதே புரியலை, நீ பேசினதும் என்னனு புரியலை. உள்ளே போய்ப் பேச மாட்டியோ??

நான் டிவி பார்க்க வந்தாலே உங்களுக்குப் பிடிக்கலை..

நான் உன்னோட கம்ப்யூட்டர் கிட்டே வரேனா?

நான் வேண்டாம்னு சொல்லலையே?

எங்கே? கொஞ்சம் தூசி தட்டிக் கொடுப்போம்னா, குய்யோ, முறையோனு அலறுகிறே??

ஆமாம், முன்னாடி தூசி தட்டறேன்னு எல்லா கனெக்ஷனையும் எடுத்துட்டுத் திரும்பப் போடறதுக்குள்ளே போறும் போறும்னு ஆயிடுத்து. போன தடவை லோகல் ஏரியா கனெக்ஷனே வரலை. அப்புறம் எந்த வயர் விட்டுப் போயிருக்குனு ஆராய்ச்சி பண்ணிண்டிருந்தீங்க??

கண்டு பிடிச்சேனா இல்லையா? அதுக்குள்ளே டாடா கம்யூனிகேஷன்ஸ் ஃபீல்டு இஞ்சினியரைக் கூப்பிட்டு, ஒரே அமர்க்களம் பண்ணிட்டே.

அது சரி, விஸ்வரூபம் இன்னும் ஆரம்பிக்கலை??

ஆரம்பிக்கலையா?? முடிஞ்சுடுத்தே? இத்தனை நாழி என்ன நடந்ததுனு நினைக்கறே??

சரியாப் போச்சு போங்க, நான் சரியாவே பார்க்கலை! அந்த ருக்குவுக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?

ருக்குவுக்கும், வெங்குட்டுவுக்கும் கல்யாணம் ஆகி ஆலத்தி எடுத்து உள்ளே அழைச்சாங்களே? பார்க்கலையா?

ம்ஹும் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, எப்போவோ சீரியல் பார்க்க வரேன், அதுவும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு, அதுவும் சரியாப் பார்க்க முடியாம.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அதான் முன்னாடி வந்தது தானே, இது ஒண்ணும் புதுசா வரலையே??

எங்கே?? அப்போவும் சரியாப் பார்க்கமுடியலை, அதோட முடிவும் சொல்லாம பட்டுனு நிறுத்திட்டாங்க, இப்போவாவது முடிவு சொல்றாங்களானு பார்க்கவேண்டாமா? இப்போவும் பார்க்கமுடியலைனா??? ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்!

என்ன பார்க்க முடியலை, நீ பார்க்கலைனா நான் என்ன பண்றது?? நான் கோலங்கள் பார்க்கிறதைக் கூட விட்டுட்டேன் உனக்காக. இந்த நேரத்தில் நான் கோலங்கள் தான் பார்ப்பேன். ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டின கதையா!!!!!!...............

என்னது நான் பிடாரியா??? எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்க!

பதிலே வரலை, இதுக்கு மட்டும் காதே கேட்கலை போலிருக்கு. ஊர்ப் பிடாரி யாரு, ஒண்ட வந்த பிடாரி யாருனு புரிஞ்சிருக்குமே! இன்னிக்கு இதான்! ஒரு வாரம் முன்னாலே நடந்தது இது! இரண்டு நாளா இணையமும் இல்லை, இணையம் பக்கம் வரவும் முடியலையா, எதுவுமே அப்லோட் பண்ணலை. நாளைக்குப் பார்க்கலாம்.