Saturday, October 31, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! 1


நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றும், ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீவித்யையை உபதேசித்ததும், சக்தி பீடங்களில் ஒன்றுமானது காஞ்சி என முன்னரே பார்த்தோம். காஞ்சி ஸ்ரீமந்நாராயணனின் இடுப்புப் பகுதியாகத் திகழ்வதாய்ச் சொல்லுவார்கள். அயோத்தி தலையாகவும், காசி மூக்காகவும், மதுரா கழுத்தாகவும், ஹரித்வார் மார்பாகவும், துவாரகை தொப்புளாகவும், அவந்தி காலடியாகவும் சொல்லப் படும். பஞ்சாமிர்த க்ஷேத்திரங்களில் ஒன்றாயும் சொல்லுவார்கள் காஞ்சியை. மற்றவை திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம் என அழைக்கப் படும் மேல்கோட்டை. ஸ்ரீ ராமாநுஜர் திருமஞ்சன கைங்கர்யம் இங்கே செய்து வந்த வேளையிலேயே பரந்தாமன் வைணவத் தலைமையை அவர் ஏற்கும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைத்தான் என்றும் சொல்லுவார்கள். பரந்தாமனுக்கு இணக்கமான ராமாநுஜரைத் தியாகம் செய்ததால் தியாக மண்டபம் எனவும் வரதராஜப் பெருமாள் கோயில் அழைக்கப் படுகிறது.

பரமஞாநிகள் வாழ்ந்த இடமான காஞ்சியில் அருள் பாலிக்கும் ஸ்ரீவரதராஜப் பெருமாளைக் கிருத யுகத்திலேயே பிரமன் வழிபட்டதாகச் சொல்கின்றனர். திரேதா யுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியும் கலியுகத்தில் அநந்த சேஷனும் வழிபட்டனர். சரஸ்வதியின் கோபத்தைப் பரந்தாமன் போக்கிய தலம் இது. நாரதர், ஆதிசேஷம், பிருகு முனிவர், இந்திரன் ஆகியோரும் வழிபட்டிருக்கின்றனர். மஹாபாரதத்தில் குறிப்பிடப் படவில்லை என்றாலும் வில்லி பாரதத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையில் காஞ்சிபுரம் வந்து தீர்த்த ஸ்நாநம் செய்து மற்றும் ஏழு நதிகளில் நீராடியதாயும் சொல்லப் பட்டுள்ளது. பொய்கை ஆழ்வார், ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதரித்தது இங்கேயே. பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூரத்தாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீநிமாந்த மஹாதேசிகர், அப்பய்ய தீக்ஷிதர், புரந்தரர், அப்புள்ளார் நடாத்தூர் அம்மா ஆகியோரால் வழிபாடுகள் செய்யப் பட்டும் போற்றிப் பாடப்பட்டும் சிறப்புப் பெற்ற தலம்.

காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் பிரசாதமான மிளகுவடையும், அருமையாக இருக்கும் என்பதோடு பல நாட்கள் ஆனாலும் வீணாய்ப் போகாது என்பது இதன் தனிச்சிறப்பு. கோயிலின் குடையின் அழகும், வரதராஜர் பவனி வரும் பல்லக்கின் பல்லக்குத் தூக்கிகள் நடக்கும் நடை அழகும் மிகவும் பிரசித்தி பெற்றவை. வடை பிரசாதம் நேரடியாகக் கோயில் மடப்பள்ளியில் இருந்து வாங்கிச் சாப்பிடணும். எங்களுக்கு அன்று பிரசாதமாகக் காஞ்சிபுரம் இட்லி கிடைத்தது. சந்நிதிக்குள் நுழையும் இடத்தில் அன்றைய காலை வழிபாட்டின் நைவேத்யப் பிரசாதத்தை பட்டாசாரியார் விநியோகித்துக் கொண்டிருந்தார். அபூர்வமாய்க் கிடைத்தது. வெளியே ஸ்டால்களில் விற்பது பிரசாதம் அல்ல.

வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் போய் இறங்கியதுமே பலவிதமான துணிக்கடைகள். எல்லாமே கைத்தறிக் கடைகள் ஒவ்வொரு முறை செல்லும்போது பார்ப்பேன். பெரிய காஞ்சியை விட இந்த விஷ்ணு காஞ்சியிலேயே நிறையக் கடைகள் கைத்தறித் துணி விற்பவையாக உள்ளன. கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே தரிசனத்துக்குச் சென்றோம். தல வரலாறை பிரம்மாண்ட புராணத்தில் காணலாம் என்று சொல்கின்றனர். ஹஸ்திகிரி வரலாறு எனவும் சொல்லப் படுகிறது. பிருகு முனிவர் கேட்க நாரதர் சொன்ன அந்தத் தல வரலாறு பின் வருமாறு:

திருமகளுக்கும், கலைமகளுக்கும் யார் பெரியவங்க என்பதில் போட்டி வந்தது. பிரம்மாவிடம் போய்ச் சந்தேகம் கேட்க திருமகளே பெரியவள் என பிரம்மா தீர்ப்புச் சொல்லிவிடுகிறார். சரஸ்வதிக்குக் கோபம் வந்து சிருஷ்டிக்குப் பயன்படுத்தும் சிருஷ்டி தண்டத்தை எடுத்துக் கொண்டு பிரமனை விட்டுப் பிரிந்து விடுகிறாள். சிருஷ்டி தண்டம் இல்லாமையால் படைப்புத் தொழிலே நின்று போக மஹாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார் பிரமன். அவரை நூறு அஸ்வமேத யாகம் செய்யச் சொன்ன விஷ்ணு, பின்னர் திவ்யக்ஷேத்திரமான காஞ்சியில் ஒரு முறை செய்தாலே நூறு முறை செய்தாற்போல் ஆகும் எனச் சொல்லி அங்கே போகச் சொல்ல, பிரமனும் காஞ்சிக்கு வருகிறார். காஞ்சியில் யாகத்தைத் துவக்கிய பிரமன் சரஸ்வதியை யாகம் செய்யத் துணைக்கு அழைக்க, சரஸ்வதி வர மறுக்கிறாள். உடனே சாவித்திரியின் உதவியோடு யாகத்தைத் துவக்கினார் பிரமன். கோபம் கொண்ட சரஸ்வதி, அக்னி, அசுரர்கள் மூலம் யாகத்தைத் தடுக்க முயல, விஷ்ணுவின் உதவியால் அவை தடுக்கப் படுகின்றன. ஆனால் சரஸ்வதியோ நதியாக மாறி தனது நீர் உருவெடுத்து வேகமாய் வேகவதியாகப் பெருக்கெடுத்து ஓடி வருகிறாள். அவள் செய்யப் போவதை உணர்ந்த விஷ்ணு அங்கே தம் கால், கைகளைப் பரப்பிப் படுத்துக் கொண்டு அணை போல் குறுக்காகப்ப் படுத்துக் கொண்டு வெள்ளத்தின் வேகத்தைத் தடுத்தார். தன் வழியில் குறுக்கிட்ட விஷ்ணுவைக் கண்டு நாணம் அடைந்த சரஸ்வதி ஒரு மாலை போல் அவரைச் சுற்றிக் கொண்டு போய் பூமியில் அந்தரவாஹினியாக மறைந்தாள். யாகம் இனிதாய் முடிவடைய, யாகத்தில் ஜோதிப் பிழம்பாய், தீபப் பிரகாசராய் விஷ்ணு தோன்றினார். சிருஷ்டி தண்டத்தை பிரமனிடம் ஒப்படைக்க, பிரமன் அவரை அங்கேயே புண்யகோடி விமானரூடராக எழுந்தருளப் பிரார்த்திக்கிறார். பெருமாளும் அவ்வண்ணமே அங்கே எழுந்தருளுகின்றார்.

சிருஷ்டி தண்டத்தை பிரமனுக்கு அளித்த நாள் கிருத யுகம் ஐந்தாவது மன்வந்தரத்தில் யுவ வருஷம், விருஷப மாதம், சுக்லபக்ஷ சதுர்த்தசி அஸ்வ நக்ஷத்திரம் என்ரு சொல்லுவார்கள். மேற்கண்ட கேள்வியை இந்திரனிடமும் கேட்டதாகவும் இந்திரனும் திருமகளையே உயர்த்திப் பேசியதால் சரஸ்வதி அவனை யானையாக மாறும்படி சபித்ததாகவும், இன்னொரு வரலாறு கூறுகிறது. மகாலக்ஷ்மி இந்திரனை பிரஹலாதனிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்று ஸ்ரீவரதராஜ க்ஷேத்திரத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெறும்படிச் சொன்னதாகவும், அதன் படி இந்திரன் இங்கே வந்து சாப விமோசனம் பெற்றதாகவும் கூறுகின்றனர். இந்திரனுக்கு ஸ்ரீநரசிம்மர் பிரத்யட்சமாகி அவனுடைய கஜரூபத்தை இரண்டாய்ப் பிளந்து சுயரூபத்தை அருளினார். அந்த நரசிம்ம மூர்த்தி, கஜரூபத்தையே மலையாகக்கொண்டு அங்கேயே குகை நரசிம்மராக எழுந்தருளி இருக்கிறார். ஹஸ்தி என்னும் யானை மலையாக மாறியதால் இந்தப்பகுதி ஹஸ்திகிரி எனப் படுகிறது.

நாங்க எடுத்த படம் சரியா வரலை என்பதாலும் அப்லோட் ஆவதில் நேரம் எடுப்பதாலும் போடமுடியவில்லை. வேலூர் ஜலகண்டேஸ்வரர், ரத்தினகிரி படங்கள் முடிந்தால் போடுகிறேன். :( காஞ்சியைக் குறித்த தகவல்கள் இன்னொரு புத்தகம் எழுதலாம் போல் நிறையவே இருக்கின்றன.

4 comments:

  1. "காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள் "
    ஐயோ! இட்லி அழகு விட்டுட்டாங்களேனு நினைசேன், ப்ரசாதமா கிடச்சதை எழுதிட்டேள்:)

    ReplyDelete
  2. ரத்னகிரி நன்னா வே இருக்கும் மேலேந்து அறுமையான காற்றும், வ்யூவும்.நல்ல granite flooring.முருகனும் வள்ளி தேவானை யோட நன்னா இருக்கும் இல்லை?

    ReplyDelete
  3. இந்த வரதராஜ ஸ்வாமி கோவில்ல தானே அத்தி ஸ்வாமி? அப்புறம்பெரிய் .. ய!! சுதர்ஷன ஸ்வாமி. இங்கதான் "ஒம் ஹ்லீம் க்ருஷ்ணாய" சுதர்ஷன மஹாமந்த்ரம் கத்துண்டேன்!!மேல ஏறி தொடற பல்லி இருக்கறது இங்கயா ஏகாம்பரேஸ்வரர் கோவில்லியா?19 வருஷத்துக்கு முன்னால போனது. மறுபடி போணும்.

    ReplyDelete
  4. வரதர் இங்க வந்துட்டார் ...

    பொறுமையா எல்லா பதிவையும் வாசிக்கணும் ...

    ReplyDelete