Tuesday, June 30, 2009

பிகாபூ!! ஐ ஸீ யூ!!!

குழந்தை முகத்தைப் பார்த்தால் சற்றுமுன்னர் தன்னை வெறுப்போடு பார்த்தது இந்தக் குழந்தைதானா என்னும்படி இருந்தது. தாய் முகத்தைப் பார்த்துச் சிரித்ததோடு அல்லாமல், தன்னைத் தூக்க வேண்டும் என்றும் செல்லமாய் அழைப்பு விடுத்தது. அவன் மனைவியும் அந்தக் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். இந்தக் குழந்தையின் பெற்ற தாய் பெற்றுப் போட்டுவிட்டுப் போனதில் இருந்து இவளே தன் பாலையே கொடுத்து வளர்த்து வருகின்றாள். தன் சிறிய மகன் பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதிலும் இருவருக்கும் சற்றும் வேறுபாடில்லாமல் தன் பாலையே கொடுத்து வளர்த்தாள். இப்போ அவள் மகனும் இல்லை, பால் குடிக்க. இந்தக் குழந்தைக்கே தன் பாலைக் கொடுக்கின்றாள். குழந்தையும் நன்கு ஆரோக்கியமாய் நன்றாகவே இருக்கிறது. நம் குழந்தையும் தாயிடம் பால் குடிப்பதைப் பொறுக்காமலேயே கொன்றுவிட்டதோ?? கணவன் மனதில் ஓர் எண்ணம் ஓட, அவன் எண்ணம் புரிந்தது போல் அந்தக் குழந்தை அவனைத் திரும்பிப் பார்த்தது. கண்களா அது?? இரு பளிங்குக் கற்களா?? உணர்ச்சிகள் மாறி மாறிக் கொட்டுவதால் கண்கள் என்றே சொல்லலாம். எப்படிப் பட்ட உணர்ச்சிகள்??? அவனிடம் வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றதே அந்தக் கண்கள். சொல்லாமல் ஏதோ செய்தியைச் சொல்லுகின்றதே? ம்ம்ம்ம்??? என்ன செய்தி??

கணவனுக்குள் திடீரென ஓர் எண்ணம். தன் மூத்த மகனையும், ஒரே மகளையும் தான் இன்னும் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளவேண்டும் என. இந்த எண்ணம் தோன்றியதும் அவர்களை அவன் திரும்பிப் பார்க்க, அந்தக் குழந்தையும் அவன் எண்ணம் புரிந்தது போல் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அவனையும் பார்த்தது. சிரித்தது. அந்தச் சிரிப்பு, அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள். உடல் சில்லிட்டது கணவனுக்கு. மனைவியின் பெயரைச் சொல்லிக் கத்தினான். உடனேயே அந்தக் குழந்தையை பாதிரியாரிடமாவது ஒப்படைக்குமாறு கெஞ்சினான். இது நாம் பெற்ற இரு குழந்தைகளின் எதிர்காலம். அதை நினைத்தாவது இந்த உதவியைச் செய் என வேண்டினான். அவன் மனைவி அவனை இப்போது சற்றே வெறுப்போடு பார்த்தாள். ஒரு பச்சைக் குழந்தையின் மேல் அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றானே?? பிறந்த உடனேயே தாயை இழந்தது இது. தகப்பன் யாரெனத் தெரியவில்லை. பால் வடியும் இதன் முகத்தைப் பார்த்தாவது தன் கணவன் மனம் மாற மாட்டானா?? இல்லை, இல்லை அவர் நல்லவர் தான். அடுத்தடுத்து இரு குழந்தைகள் இறக்கவும் ஊரிலும் எல்லாரும் இந்த வீட்டைச் சாத்தான் சுத்துகிறது என்று பேசவும் சற்றே மனம் தடுமாறி விட்டார்.

சில மாதங்கள் கழிந்தன. எத்தனை நாட்கள் ஆனாலும் தன்னிரு குழந்தைகளை இருவராலும் மறக்கமுடியவில்லை. ஒருநாள் பெரிய மகன் குளிக்கக் குளியலறைக்குச் சென்றான். வெகுநேரம் ஆகியும், அவன் திரும்பி வரவே இல்லை. கணவன் மனதில் பயம் பிடித்துக் கொள்ளக் குளியலறைக்குச் சென்றான். அங்கே குளியல் தொட்டியில் அவன் மகன் பிணமாய்க் கிடந்தான். அவன் பக்கத்தில் அந்தக் குழந்தையின் உடலில் இருக்கும் நாடா. அந்தக் குழந்தை இங்கே வந்ததா?? சட்டெனத் திரும்பிப் பார்த்த கணவன் கண்களில் சற்றுத் தூரத்தில் இருந்த வாயிலுக்குத் தவழ்ந்து சென்று கொண்டிருக்கும் குழந்தை கண்களில் பட, வேகமாய் ஓடி அந்தக் குழந்தையை இன்னிக்கு இரண்டில் ஒன்று பார்க்கவேண்டும் என்று ஓட, அவன் மனைவி அந்தக் குழந்தையைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டு வர, அவன் மரமாய் நின்றான். குளியல் தொட்டிக்கருகில் வந்து பார்த்த மனைவி அலறினாள். அவள் அலறல் நிற்கவில்லை. அவள் மனதில் கணவனே தன் மகனைக் கொன்றிருப்பானோ என சந்தேகம்!

2 comments:

  1. அட... கதை ரணகளமா போகுதே.. இன்னும் ஒன்னும் தான் மிச்சம்.. அதுக்கும் வேட்டு தானா?

    ReplyDelete
  2. வாங்க புலி, அதுக்கும் வேட்டுத் தான்! :(((((

    ReplyDelete