Wednesday, July 16, 2008

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள் தொடர்ச்சி 7

இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே முந்தைய பகுதிகளை வாசிக்கவும். இப்போ நாம் காணப் போவது கைலாச நாதர் கோவில் இருக்கும் குகைப் பகுதி. இது உலகிலேயே ஒரே கல்லால் கட்டப் பட்ட மிகப் பெரிய குகைக்கோயில் என்று சொல்லப் படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் இங்கு மிகுந்து காணப் படுகின்றது. எதுவுமே பெரிய அளவிலேயே நம் முன்னோர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ஒரு சான்று. பெரிய புத்தர் சிலைகள், பெரிய சிவலிங்கம் என எல்லாமே மிகப் பெரிய அளவிலானது. இவை எல்லாம் செய்து முடிக்க எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. சற்றும் சலிக்காமல் மழையிலும், வெயிலிலும், குளிரிலும் அலுப்புக் கொள்ளாமல், உடல் வருத்தம் பாராமல் வெறும் உளியையும், சுத்தியலையும் வைத்துக் கொண்டு செதுக்கிய இந்தச் சிற்பங்களின் அளவையும், அழகையும், குகைக் கோயில்களின் அமைப்பையும் பார்த்தால் கட்டுமானத் துறையில் எத்துணை சிறந்தவர்களாயும், வல்லவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் நன்கு புலனாகின்றது அல்லவா??
குகைக்கோயில்களுக்குச் செல்லும்போது கடந்து செல்லும் பாதை இது. முற்றிலும் மலைப்பாறைகளினாலேயே ஆன பாதை இது. இந்தப் பாதையைக் கடந்ததும் வருவதே கைலாசநாதர் கோயில் ஆகும். முற்றிலும் ஒரே கல்லினால் ஆன இந்தக் கோயில் பெரிய அளவில் அலங்கரிக்கப் பட்டு மூன்று தளங்கள் கொண்டதாய விளங்குகின்றது. மேலிருந்து கீழே செதுக்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் வெளிச் சுவற்றில் இருந்து உள்ளே செல்லும் வழியில் ஒரு பெரிய முற்றம் காணப் படுகின்றது. முக்கியமான சிவன் கோயிலைச் சுற்றிலும் அது செல்லுகின்றது. எதிரே ஒரு பெரிய நந்தீஸ்வரர் காணப் படுகின்றார். மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டுள்ளது சிற்பங்களால். கிட்டத் தட்ட 20 மீட்டர் உயரம் உள்ள தூண்கள் இருபுறமும் காணப் படுகின்றன. மூன்று யானைகள் அவற்றை அலங்கரிக்கின்றது.
முற்றத்தின் இடது பக்கம் நதி தேவதைகளும், அதன் வலது பக்கத்தில் இலங்கேஸ்வரன் கோயிலும் உள்ளது. கோயில் மேற்கே பார்த்து எழும்பி உள்ளது. கீழ்த்தளத்தில் உள்ளது. கையில் தாமரைப் பூக்களை வைத்துள்ள யானைச் சிற்பங்கள் காணப் படுகின்றன. மேல் தளம் 16 அல்லது 14 தூண்கள் உள்ள மண்டபத்துடனும், மூன்று முக மண்டபங்களுடனும் காணப் படுகின்றது. நந்தி இருக்கும் கூடாரத்தை இவை ஒரு பாலத்தால் இணைக்கின்றது. கைலை என அழைக்கப் படும் கைலாசத்தின் கலாசார வடிவங்கள் மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. துர்கை அம்மன் வலது பக்கமும், இடது பக்கம் நுழையும் இடத்தில் விநாயகர் சிற்பம் சற்றே சிதைந்த நிலையிலும் காணப் படுகின்றது. இரண்டு படிக்கட்டுகள் மேல்தளத்துக்குச் செல்லக் காணப் படுகின்றது. முக்கியமான கோயிலின் மண்டபத்தில் ராமாயணச் சிற்பக் காட்சிகளும், மகாபாரதக் காட்சிகளும் காண முடிகின்றது. கீழ்த்தளத்தில் ஈசன் கஜமுகாசுரராக யானையாக வந்த அசுரனைக் கொன்று அந்தத் தோலுடன் நடனமாடும் கோலத்தில் காண்கின்றோம். மேலே மண்டபத்தில் ஆஹா, இது என்ன?? ஜடாயுவா இது? ராவணனுடன் சண்டை போடுவதைப் பார்த்தால் நிஜம் போல் தோன்றுகின்றதே? இதோ இங்கே மகாலட்சுமி, இங்கே துர்க்கை. இன்னும் பார்க்க ஆசைதான், ஆனால் இதை முடித்துவிட்டு மேலே போய் அங்கிருந்து கீழே தெரியும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வண்டிக்கு வரச் சொல்லி வழிகாட்டி சொல்லிவிட்டாரே?? மற்ற குகைகள்?? மற்றவை கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளது. உள்ளே செல்ல அனுமதி இல்லை! அடக் கடவுளே? அப்போ ஜைனக் குகைகள்??சாப்பாடு முடிஞ்சு திரும்ப வருவோம். சரி, இப்போ சாப்பிட்டு விட்டே வருவோம். நமக்கும் கொஞ்சம் அலுப்பாய் இருக்கிறது. இதை ஆரம்பிச்சது என்னமோ எல்லோராவில். ஆனால் எல்லோரா வரதுக்கு முன்னாலே தேவகிரிக் கோட்டைக்கு மேலே ஏறிச் சென்றது வேறே ஆயாசம் அதிகமாய் உள்ளது. தேவகிரிக் கோட்டையும், மிச்சம் இருக்கும் ஜைனக் குகையும் நாளை பார்ப்போமா????

No comments:

Post a Comment